கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 36 பேர் உயிரிழந்ததாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த பயங்கர நிலச்சரிவில் 36 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
இன்று செவ்வாய்கிழமை அதிகாலை மேப்பாடி அருகே பல்வேறு பகுதிகளில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. முண்டகையில் அதிகாலை 1 மணிக்கும் பின்னர் அதிகாலை 4 மணிக்கும் இரண்டு முறை மண்சரிவு ஏற்பட்டதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தகவல் கிடைத்ததும் கேரள மாநில பேரிடர் மேலாண்மை படையினர், தீயணைப்பு படையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது அங்கு நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன.