நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, உள்ளிட்ட காரணிகளால் இந்திய ரிசர்வ் வங்கியானது தனது ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியது. இதனை தொடர்ந்து தற்போது சில திட்டங்களின் வட்டி விகிதங்களை மத்திய அரசு உயர்த்தி வருகிறது. இதில் குறிப்பாக சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள் ஒவ்வொரு காலாண்டிலும் மத்திய அரசு நிர்ணயம் செய்கிறது.
அதன்படி நடப்பு காலாண்டிற்கான அதாவது ஜனவரி – மார்ச் மாதத்திற்கான சிறு சேமிப்பு திட்டத்தின் வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்து மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போது சிறு சேமிப்பு திட்டத்தின் வட்டி விகிதத்தில் 20பிபிஎஸ் மற்றும் 110பிபிஎஸ் வரம்பில் உயர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் இந்த உயர்த்தப்பட்ட வட்டி விகிதங்கள் ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
மத்திய அரசு உயர்த்திய வட்டி விகிதத்தின்படி, இனி ஜனவரி 1ம் தேதி முதல் தேசிய சேமிப்புச் சான்றிதழ் சேமிப்பு திட்டத்தின் வட்டி விகிதம் 6.8% இருந்து 7% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதே போல், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் 7.6% இருந்து 8% என அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் எந்தவித மாற்றமின்றி 7.1% வட்டி விகிதம் வழங்கப்பட்டுள்ளது.