எண்ணெய் வித்துக்கள் விலை வீழ்ச்சியை அடுத்து, விவசாயிகளை பாதுகாக்கும் வகையில், சமையல் எண்ணெய் இறக்குமதிக்கான வரியை மத்திய அரசு அதிகரித்துள்ளது.
சமீபத்தில் வெளியிடப்பட்ட உத்தரவுகளின்படி, பாமாயில், சோயா பீன் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் மீதான இறக்குமதி வரி 20 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கு தற்போது வரை இறக்குமதி வரி கிடையாது. மேலும், சுத்திகரிக்கப்பட்ட பாமாயில், சூரியகாந்தி மற்றும் சோயா பீன் எண்ணெய் ஆகியவற்றின் இறக்குமதி வரி 12.5 சதவீதத்தில் இருந்து 32.5 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி வரி குறைந்து இருந்ததால் உள்நாட்டு வர்த்தகர்கள் பிற நாடுகளில் இருந்து அதிகமாக இறக்குமதி செய்கின்றனர். இதனால் உள்நாட்டு விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.
இப்போது இந்த நடவடிக்கை மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதியை குறைக்கும். இதனால் உள்நாட்டு விவசாயிகள் பெரிதும் பயனடைவார்கள். மேலும், சோயாபீன் மற்றும் ராப்சீட் பயிர்களுக்கு அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஆதரவு விலையை விவசாயிகள் பெற வாய்ப்புள்ளது.
இருப்பினும், அதே நேரத்தில் சமையல் எண்ணெய்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது சாமானியர்களுக்கு மற்றொரு சுமையாக இருக்கும் என்று சந்தை வட்டாரங்கள் கூறுகின்றன.