
சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்வது குறித்து கேரள அரசு முக்கிய முடிவு எடுத்துள்ளது. இந்த ஆண்டு ஆன்லைன் முன்பதிவு மூலம் மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 80 ஆயிரம் பேர் ஐயப்பசுவாமியை தரிசனம் செய்வார்கள் என கோயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மெய்நிகர் வரிசை முன்பதிவு நேரத்தில், பக்தர்கள் தங்கள் பயண வழியைத் தேர்ந்தெடுக்கும் விருப்பமும் இருக்கும். இதற்கான அரசாணையை இன்று சனிக்கிழமை கேரள அரசு வெளியிட்டது.
மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே மெய்நிகர் வரிசை முன்பதிவு செய்யலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன் ஆன்லைன் முன்பதிவு வசதி 10 நாட்களுக்கு முன்னதாக மட்டுமே இருந்தது. தற்போது அதை திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூன்று மாதங்களுக்கு முன்பே உயர்த்தியுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மண்டல பூஜைகளின் போது சபரிமலைக்கு பக்தர்கள் குவிந்தனர். சில பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்காமல் வீடுகளுக்கு திரும்பினர். பக்தர்களின் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு விழாக்களுக்கான ஸ்பாட் புக்கிங்கை தேவஸ்தான வாரியம் ரத்து செய்துள்ளது.