கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா தொற்றுநோய் மீண்டும் தலைதூக்கியுள்ளது. இந்தியாவின் அண்டை நாடான சீனாவில் கொரோனா பரவி வருகிறது.
இந்நிலையில், இந்திய அரசு உஷார் நிலையில் உள்ளது. இதன் ஒரு பகுதியாக, நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் மீண்டும் கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுகிறது. கொரோனா மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், சர்வதேச விமானங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இந்த நிலையில், கொரோனா பரவல் குறித்து எய்ம்ஸ் முன்னாள் இயக்குநர் டாக்டர். ரந்தீப் குலேரியா முக்கிய கருத்துக்களை தெரிவித்தார். தற்போதைய சூழ்நிலையில் நாட்டில் ஊரடங்கு தேவையில்லை என்று அவர் கூறினார்.
சர்வதேச விமானங்களுக்கும் எந்த கட்டுப்பாடும் விதிக்க தேவையில்லை என்று ரந்தீப் குலேரியா கூறினார். கொரோனா வைரஸை எதிர்கொள்ளும் கலப்பின நோய் எதிர்ப்பு சக்தி இந்திய மக்களிடம் அதிகரித்துள்ளது என்றார். வைரஸ் குறித்து மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். இதற்கிடையில், கொரோனா வைரஸின் புதிய வகையான பிஎஃப் 7 மாறுபாட்டை அடுத்து மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொது இடங்களில் மீண்டும் முககவசங்களை பயன்படுத்தவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் மத்திய அரசு மக்களை எச்சரித்துள்ளது. இது தவிர, அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன் இருப்பை அதிகரிக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.