இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கோடை வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகரித்து வந்ததால், பள்ளிகளுக்கு 2022-2023 ஆம் கல்வி ஆண்டு இறுதித் தேர்வுகள் முன்கூட்டியே நடத்தப்பட்டன. இதில், குறிப்பாக புதுச்சேரி மாநிலத்தில், கடந்த ஏப்ரல் 19 ம் தேதியே அனைத்துப் பள்ளிகளிலும் ஆண்டு இறுதித் தேர்வுகள் முடிவடைந்தன.
இதையடுத்து, ஏப்ரல் 20ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை புதுச்சேரியில் உள்ள பள்ளிகள் அனைத்திற்கும் கோடை விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. தென்னிந்திய பகுதிகளில் அக்னி நட்சத்திரம் முடிந்த போதிலும், வெப்ப அலை காரணமாக வெயிலின் தாக்கம் அதிகரித்த வண்ணமே உள்ளது. இதனால், மாணவர்களின் நலன் கருதி கோடை விடுமுறை நீட்டித்து ஜூன் 7ம் தேதி புதிய கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் தொடங்கும் என தமிழக கல்வித்துறை அமைச்சர் அறிவித்திருந்தார்.
இதன் தொடர்ச்சியாக, புதுச்சேரியிலும் பள்ளி திறப்பு தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது, தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஜூன் 1ம் தேதிக்கு பதில் ஜூன் 7ம் தேதி பள்ளி திறக்கப்படும் என புதுச்சேரி கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
