அதானி விவகாரத்தை திசை திருப்பவே தான் எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த ராகுல் காந்தி, பிரதமர் மோடி தன்னை கண்டு பயந்துவிட்டதாக கூறியுள்ளார்.
2 ஆண்டு சிறை தண்டனை பெறப்பட்டதால் எம்.பி பதவி பறிக்கப்பட்ட நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து டெல்லியில் ராகுல்காந்தி செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.
அப்போது பேசிய அவர், விமானத்தில் பிரதமர் மோடியுடன் அதானி இருக்கும் புகைப்படத்தை மக்களவையில் காட்டிய பிறகே தன் மீதான தாக்குதல்கள் அதிகரித்ததாகவும், பிரதமர் மோடி – அதானிக்கு இடையே உள்ள உறவு குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதால் தான், தன் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், ஆனால் நான் எதற்கும் அஞ்சமாட்டேன் என்றும் தொடர்ந்து கேள்விகளை எழுப்பிக்கொண்டே தான் இருப்பேன் எனவும் ராகுல் காந்தி தெரிவித்தார்.
தொழிலதிபர் அதானி, ஷெல் நிறுவனங்களை நடத்தி வருவது உண்மை தானா? என்றும், ஷெல் நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ள ரூ.20 ஆயிரம் கோடி யாருடையது? என்றும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.
அதானியின் ஷெல் நிறுவங்களில் சீனாவை சேர்ந்த ஒருவரின் பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும், ராகுல் காந்தி தெரிவித்தார். நாடாளுமன்றம் மற்றும் ஊடகங்களின் தரவுகளின் அடிப்படையிலேயே தான் கேள்வி எழுப்பியதாகவும் ராகுல் காந்தி விளக்கினார். தொடர்ந்து பேசிய அவர், இந்திய அரசுக்கு எதிராக நான் வெளிநாட்டு சக்திகளின் ஆதரவை கேட்டதாக கூறுவது முற்றிலும் தவறு என ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். என் மீது வன்முறை கட்டவிழ்த்தாலும், சிறையில் அடைத்தாலும் அஞ்சமாட்டேன் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.
நான் பேசுவதை கண்டு பிரதமர் மோடி பயப்படுவதாகவும், அவருடைய கண்ணில் பயம் தென்பட்டதாக தெரிவித்தார். என்னை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படாவிட்டாலும் எனது பணியை தொடர்ந்து மேற்கொள்வேன், தன் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை எனவும் தேசத்துக்கு எதிரான சக்திகளை முறியடிப்பேன் என ராகுல் காந்தி உறுதி அளித்தார்.