இன்று முதல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் | அதானி விவகாரம்: விவாதத்திற்கு காங்கிரஸ் வலியுறுத்தல்!
புதுடெல்லி:
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், மணிப்பூர் நிகழ்வு, அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் காற்று மாசுபாடு குறித்து விவாதம் நடத்த வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கையை முன்வைத்துள்ளது. இதனால், இன்று திங்கள்கிழமை தொடங்கும் குளிர்காலக் கூட்டத் தொடரில் இந்த விவகாரம் தொடர்பான விவாதங்கள் நடைபெறுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன.
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்தனர்.
காங்கிரஸின் இந்த கோரிக்கைக்கு பதிலளித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, ‘சபைகளில் எந்தெந்த பிரச்சனைகள் விவாதிக்கப்பட வேண்டும் என்பதை நிகழ்ச்சி நிரலின்படி சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் ஆலோசனைக் குழு முடிவு செய்யும். கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெற அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்பி பிரமோத் திவாரி, ‘கௌதம் அதானி மீது அமெரிக்க நீதித் துறை கூறியுள்ள லஞ்சப் புகார்களை அரசு தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என்று கூட்டத்தொடருக்கு முன்பே அக்கட்சி வலியுறுத்தியது. அமர்வில் இது குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
“மணிப்பூரில் நிலைமை கட்டுக்கடங்காமல் போகிறது. அங்குள்ள பிரச்னையை தீர்க்க இந்த அரசுக்கு விருப்பம் இல்லை. “பிரிக்கவும் கொல்லவும்” என்பது இந்த அரசாங்கத்தின் தாரக மந்திரம், மணிப்பூர் பிரச்சினைகள் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். மேலும், ‘வட இந்தியாவில் அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டம் மற்றும் அதிகரித்து வரும் காற்று மாசு குறித்தும் விவாதம் நடத்த வேண்டும்’ என்றார்.
கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, சட்ட அமைச்சர் அர்ஜூன் மேக்வால், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் எல்.முருகன், ராஜ்யசபா காங்கிரஸ் உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ், மக்களவை உறுப்பினர் கௌரவ் கோகோய், கே.சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Posted in: இந்தியா