நிலவில் ஆய்வு மேற்கொள்ள உள்ள சந்திரயான் 3 விண்கலம் தனது இலக்கை நோக்கி மேலும் ஒரு அடியை எடுத்து வைத்துள்ளது. இதுவரை பூமியின் நான்காவது சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வந்த இந்த விண்கலம் ஐந்தாவது சுற்றுப்பாதைக்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இன்று வெற்றிகரமாக மாற்றியது.
பெங்களூரில் உள்ள இஸ்ரோ டெலிமெட்ரி, டிராக்கிங் மற்றும் கமாண்ட் நெட்வொர்க்கில் இருந்து இந்தப் பணி மேற்கொள்ளப்பட்டது. ஐந்தாவது புவி சுற்றுப்பாதையை முடித்த பிறகு, விண்கலம் சந்திர சுற்றுப்பாதையில் செல்லும். எல்லாம் சரியாக நடந்தால், ஆகஸ்ட் 23 மாலை நிலவில் தரையிறங்கும்.
இதற்கிடையில், சந்திரயான் 3 பூமியைச் சுற்றி வரும் கடைசி சுற்றுவட்டப் பாதை இதுவாகும். இதன் பிறகு விண்கலம் சந்திர சுற்றுப்பாதையில் நுழையும். ஆகஸ்ட் 1ம் தேதி இந்த பணி மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்த விண்கலம் ஜூலை 14 அன்று எல்விஎம்3 எம்4 ராக்கெட் மூலம் பூமியின் புவி சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
