சீன ஆக்கிரமிப்பு விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படாது என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
அனைத்துக் கட்சிகளுடன் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, எல்லையில் சீன அத்துமீறல்களை எழுப்பினார். இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த மத்திய அரசை கேட்டுக் கொண்டார். ஆனால், தேசிய பாதுகாப்பு பிரச்னை என்பதால், பார்லிமென்டில் விவாதிக்க முடியாது என, மத்திய அரசு கூறியுள்ளது.
- Advertisement -
இதனிடையே, அனைத்துக் கட்சி கூட்டத்துக்குப் பிறகு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி செய்தியாளர்களிடம் பேசினார். அனைத்து பிரச்னைகளையும் விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது என்றார். அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் 27 கட்சிகளைச் சேர்ந்த 37 தலைவர்கள் பங்கேற்றதாக அவர் கூறினார். பட்ஜெட் கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெற எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை முதல் தொடங்குகிறது. குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இரு அவைகளிலும் உரையாற்றுவார். அதன்பிறகு முதல் நாளில் மக்களவை மற்றும் ராஜ்யசபாவில் பொருளாதார கணக்கெடுப்பு அறிமுகப்படுத்தப்படும். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். முதல் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 13ம் தேதி வரை நடைபெறும். அதன்பின் அடுத்த கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 13ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறும். அரசு பல மசோதாக்களை நிறைவேற்றும்.