தமிழகத்திற்கு டிசம்பர் இறுதி வரை தினமும் 2700 கன அடி தண்ணீர் திறக்க காவேரி மேலாண்மை உத்தரவு

 

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மைக் குழுவின் 90வது கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது.

மேலாண்மை குழுத் தலைவர் வினீத் குப்தா தலைமையில் காணொலிக் காட்சி மூலம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி மற்றும் கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

 

இதில் தமிழ்நாட்டில் இருந்து காவிரி தொழில் நுட்ப குழு தலைவர் ஆர். சுப்பிரமணியன், முதன்மை பொறியாளர் சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்று பேசினார்கள்.

இந்த மாதம் கர்நாடகத்தில் இருந்து பருவமழையால் காவிரியில் வினாடிக்கு 5 ஆயிரம் முதல் 8 ஆயிரம் கனஅடி வரை தண்ணீரை திறந்து விட்டுள்ளனர். ஆனால் தர வேண்டிய பழைய நிலுவை அப்படியே உள்ளது. இதுவரை தமிழகத்துக்கு 11 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் திறந்து விட்டிருக்க வேண்டும். அது கிடைக்கவில்லை. இந்த டிசம்பர் மாதம் 6 டி.எம்.சி. தண்ணீர் தர வேண்டும். அதையும் சேர்த்து மொத்தம் 17 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டும். எனவே அந்த தண்ணீர் கிடைக்க உத்தரவிட வேண்டும்.

 

இவ்வாறு அதிகாரிகள் வலியுறுத்தினார்கள்.

இதைத்தொடர்ந்து காவிரி மேலாண்மை குழு, தமிழகத்திற்கு நாள் ஒன்றுக்கு 2700 கன அடி தண்ணீரை டிசம்பர் இறுதி வரை திறக்க வேண்டும் என கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது.

 
 
Exit mobile version