தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்திற்கு 19 ஆயிரத்து 744 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அனுராக் தாக்கூர், தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்திற்கு முதல் கட்டமாக 17 ஆயிரத்து 490 கோடியும், முன்னோடி திட்டங்களுக்கு ஆயிரத்து 466 கோடியும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு 400 கோடியும், இதர செலவினங்களுக்கு 388 கோடி என மொத்தம் 19 ஆயிரத்து 744 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக கூறினார்.
2030-ம் ஆண்டுக்குள் குறைந்தபட்சம் ஆண்டுக்கு 5 மில்லியன் மெட்ரிக் டன் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி செய்வதற்கான திறன் மேம்படுத்தப்படும் என்றும் திட்டத்திற்கான மொத்த முதலீடு 8 லட்சம் கோடிக் ரூபாய்க்கு மேலாக இருக்கும் என்றும் 6 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.
