சில ஆண்டுகளுக்கு முன்பு வரை திருநங்கைகளுக்கு என்று அங்கீகாரம் கிடைக்காத நிலை இருந்து வந்தது. ஆனால் தற்போது பல மாநில அரசு துறைகளிலும் திருநங்கைகள் பணியாற்றுகின்றனர். இதேபோல், அனைத்து மாநிலங்களிலும் திருநங்கைகளுக்கு என்று மூன்றாம் பாலினத்தவர் பிரிவின் கீழ் பல சிறப்பு சலுகைகள் மற்றும் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் உதவிக் காவலர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் பணிக்கான உடல்தகுதித்தேர்வு நடத்தப்பட்டது.
இந்த தகுதித்தேர்வில் திருநங்கைகள் கலந்து கொண்டனர். ஆனால் இவர்கள் அனைவரும், விண்ணப்பத்தில் 10ம் வகுப்பு சான்றிதழ் படி பெயர் மற்றும் பாலினம் குறிப்பிடும் நிலை உள்ளது. இதனால் இவர்கள் ஆண்களாக தான் கருதப்பட்டு போட்டியில் கலந்து கொள்கின்றனர். முழுவதுமாக அறுவை சிகிச்சை செய்து பெண்களாக மாறிய பின்னர் உடல்தகுதி தேர்வில் ஆண்களின் பிரிவின் கீழ் போட்டியிடுவது நியாயமானதாக இல்லை என்று காகடியா பல்கலைக்கழக வளாகம் முன்பு திருநங்கைகள் போராட்டம் நடத்தினர்.
- Advertisement -
மேலும், திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் 2019 மற்றும் திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) விதிகள் 2020 ஆகியவற்றின் கீழ் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் அல்லது பெண்கள் பிரிவின் கீழ் உடல் தகுதி தேர்வில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் அல்லது திருநங்கைகளுக்கு என்று தனி சிறப்பு பிரிவு வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு வலியுறுத்துகின்றனர். இதை குறித்து அரசு மற்றும் தெலுங்கானா மாநில அளவிலான போலீஸ் ஆட்சேர்ப்பு வாரியம் (TSLPRB) ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.