நடப்பு நிதியாண்டின் நவம்பர் 30ஆம் தேதி நிலவரப்படி, நேரடி வரி வசூல் 24.26 சதவீதம் அதிகரித்து ரூ. 8.77 லட்சம் கோடி என்று மத்திய நிதி அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த வசூல் 2022-23 நிதியாண்டிற்கான பட்ஜெட் மதிப்பீட்டில் 61.79 சதவீதத்திற்கு சமம் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நடப்பு நிதியாண்டிற்கான நேரடி வரி வசூல் பட்ஜெட் மதிப்பீடு ரூ. 14.20 லட்சம் கோடி. கடந்த நிதியாண்டில் மொத்தம் ரூ. 14.10 லட்சம் கோடி வசூல் சாதனை படைத்துள்ளது. கார்ப்பரேட் மற்றும் தனிநபர் வருமானத்தின் மீது விதிக்கப்படும் வரிகள் நேரடி வரிகளாகக் கருதப்படுகின்றன. இந்த வசூல் அதிகரித்தால், நாட்டின் பொருளாதார நடவடிக்கைக்கான அறிகுறியாக கருதலாம்.
மேலும், ஒவ்வொரு மாதமும் சரக்கு மற்றும் சேவை வரி (GST) வசூல் ரூ. 1.45-1.50 லட்சம் கோடி வசூலிக்கப்படுகிறது. அதேபோல், நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் 1 முதல் நவம்பர் 30 வரை ரூ. 2. 15 லட்சம் கோடியை திருப்பி செலுத்தியுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.