விளையாட்டு

3ஆவது டெஸ்ட்: போராடி டிராவில் முடித்த இந்தியா!

இந்திய – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது.
பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றுவருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடியது.

ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ்:

அதன்படி அந்த அணியின் முதல் இன்னிங்ஸில் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுசாக்னே ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ஸ்டீவ் ஸ்மித் சதமடித்தும் அசத்தினார்.

இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி, தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 338 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகப்பட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 131 ரன்களையும், மார்னஸ் லபுசாக்னே 91 ரன்களையும் எடுத்திருந்தனர். இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இந்தியாவின் முதல் இன்னிங்ஸ்:

முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா – சுப்மன் கில் இணை தொடக்கம் தந்தது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் சர்வதேச டெஸ்ட்டில் தனது முதல் அரை சதத்தைப் பதிவு செய்தார்.

அதன்பின் வந்த புஜாராவும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அரை சதம் கடந்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்கள் எதிரணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்குத் திரும்பினர்.

இதனால் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 244 ரன்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து நிறைவு செய்தது. இந்திய அணி தரப்பில் சுப்மன் கில், புஜாரா இருவரும் தலா 50 ரன்களை சேர்த்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் கம்மின்ஸ் 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

மீண்டும் அசத்திய ஸ்மித், லபுசாக்னே:

இதைத்தொடர்ந்து 94 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர், வில் புகோவ்ஸ்கி ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

பின்னர் ஜோடி சேர்ந்த ஸ்மித் – லபுசாக்னே இணை மீண்டும் சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தது. இதில் இருவரும் அரை சதம் கடந்து அசத்தினர். பின்னர் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்டீவ் ஸ்மித் 81 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் இருந்த லபுசாக்னேவும் 73 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

அதன்பின் களமிறங்கிய காமரூன் கிரீன் அதிரடியாக விளையாடி 84 ரன்களை சேர்த்தார். பின்னர் ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 312 ரன்களை எடுத்து டிக்ளர் செய்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு இலக்காக 407 ரன்களையும் ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்தது.

அடித்தளமிட்ட ரோஹித், சுப்மன்:

இமாலய வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியின் ரோஹித் சர்மா – சுப்மன் கில் இணை சிறப்பான தொடக்கத்தைத் தந்தது. இதில் சுப்மன் கில் 31 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழக்க, மறுமுனையில் ரோஹித் சர்மா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் கடந்தார். பின்னர் 52 ரன்களில் ரோஹித்தும் விக்கெட்டை இழந்தார்.

அதன்பின் வந்த கேப்டன் ரஹானேவும் 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதனால் இந்திய அணி வெற்றி பெறுமா? என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழத்தொடங்கியது.

பந்த் – புஜாரா பாட்னர்ஷிப்:

பின்னர் ஜோடி சேர்ந்த ரிஷப் பந்த் – செட்டேஸ்வர் புஜாரா இணை முதலில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பைத் தடுத்தது. அதன்பின் தனது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பந்த், எதிரணியின் பந்துவீச்சை பவுண்டரிகளாக மாற்றி அசத்தினார்.

ஒருபுறம் பந்த் அதிரடியில் மிரட்ட, மறுபுறம் புஜாரா தனது டிஃபென்ஸால் எதிரணி பந்துவீச்சாளர்களைத் திணறச்செய்தார். இந்த ஜோடி நான்காவது விக்கெட் பார்ட்னர்ஷிப்பாக 100 ரன்களையும் சேர்த்தது.

இதில் அரை சதம் கடந்த ரிஷப் பந்த், சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 97 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார். மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய புஜாரா சர்வதேச டெஸ்ட்டில் தனது 25ஆவது அரை சதத்தைப் பதிவு செய்தார்.

டிஃபென்ஸில் புஜாராவை மிஞ்சிய விஹாரி:

பின்னர் 77 ரன்கள் எடுத்திருந்த புஜாரா, ஹெசில்வுட் பந்துவீச்சில் போல்டாகினார். இதனால் இந்திய அணியின் தோல்வி ஏறத்தாள உறுதியானது என்றே தோன்றியது. ஆனால், அதன்பின் ஜோடி சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் – ஹனுமா விஹாரி இணை டிஃபென்ஸிவ் ஆட்டத்தைக் கண்டு எதிரணியின் பந்துவீச்சாளர்கள் திணறினர்.

அதிலும் ஹனுமா விஹாரி 100 பந்துகளை சந்தித்து 6 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது கம்மின்ஸ், ஸ்டார்க் ஆகியோருக்கு எரிச்சலை உண்டாகியது. இதனால் ஆட்டத்தின் கடைசி ஓவர்களில் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர்கள் விக்கெட்டை எடுக்கத் தடுமாறினர்.

இதில் ஹனுமா விஹாரி 161 பந்துகளைச் சந்தித்து 23 ரன்களையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 128 பந்துகளைச் சந்தித்து 39 ரன்களையும் எடுத்தனர்.

டிராவில் முடிந்த ஆட்டம்:

இதனால் ஐந்தாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 334 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இதனால் இந்திய – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்திய அணி தரப்பில் ரிஷப் பந்த் 97 ரன்களையும், புஜாரா 77 ரன்களையும் எடுத்திருந்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் லயன், ஜோஷ் ஹெசில்வுட் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதன்மூலம் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-1 என்ற கணக்கில் தக்கவைத்துள்ளது.

Back to top button
error: Content is protected !!