குடியரசு தின வன்முறை.. இவரை பிடித்து கொடுத்தால் ரூ.1 லட்சம் பரிசு..!

விவசாயிகள் டிராக்டர் பேரணி நடந்த குடியரசு தினமான ஜனவரி 26ம் தேதியன்று டெல்லி செங்கோட்டையில் ஏற்பட்ட வன்முறையில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள தீப் சித்து பற்றி தகவல் அளித்தால் ரூ. 1 லட்சம் பரிசை டெல்லி போலீஸ் அறிவித்துள்ளது.
குடியரசு தினத்தன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாய அமைப்புகள் டிராக்டர் பேரணியை அனுமதி பெற்று நடத்தியது. அப்போது போராட்டக்காரர்களின் ஒருபிரிவினர் அனுமதிக்கப்பட்ட பாதையை மீறி செங்கோட்டைக்குள் புகுந்து தேசியக்கொடியை இறக்கி சீக்கிய கொடியை ஏற்றினர். இதில் தீப் சித்து என்பவரும் மற்ற நால்வரும் சம்பந்தப்பட்டதாக தகவல்கள் எழுந்தன. தீப் சித்து பாஜக ஆள், மோடியுடன் சேர்ந்து அவர் எடுத்துக் கொண்ட புகைப்படமும் வெளியானதாகவும் எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டுகளை எழுப்பின.
இந்த வன்முறையை அடுத்து டெல்லி போலீஸார் லத்தி சார்ஜ், கண்ணீர்ப்புகை குண்டு வீசி வன்முறையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதன் பிறகு டெல்லி போலீஸின் குற்றப்பிரிவு இந்த வன்முறையில் தொடர்புடைய 12 பேரின் புகைப்படங்களை வெளியிட்டது. இந்தப் புகைப்படத்தில் உள்ளவர்கள் லத்தி போன்ற ஆயுதங்களுடன் இருந்தது தெரியவந்தது.
இதுவரை வன்முறை தொடர்பாக டெல்லி போலீஸ் 44 வழக்குகளைப் பதிவு செய்து 122 பேரைக் கைது செய்துள்ளனர். விவசாய சங்கத்தலைவர்கள் மீதும் வழக்குப் போடப்பட்டுள்ளது.போலீசார் பத்திரிகையாளர்கள் உட்பட சிலர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர். காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் மீதும் வழக்குப் பதியப்பட்டது.
இந்த வன்முறைக்குக் காரணம் தீப் சித்து என்ற பாஜகவுக்கு நெருக்கமான நபரே என்றும் அவரைக் கைது செய்ய வேண்டும் என்றும் போராட்டத்தை ஒடுக்க ஆளுங்கட்சியின் செயல்தான் இந்த வன்முறை என்றும் விவசாய அமைப்புகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில்தான் தீப் சித்து பற்றிய தகவல் அளித்தால் ரூ.1 லட்சம் பரிசும் மற்ற நால்வர்(ஜக்பீர் சிங், பூட்டா சிங், சுக்தேவ் சிங், மற்றும் இக்பால் சிங்) பற்றிய தகவல் அளித்தால் ரூ.50,000 பரிசு என்றும் டெல்லி போலீஸார் அறிவித்துள்ளனர்.