பொழுதுபோக்குதமிழ்நாடு

சித்திரை ஸ்பெஷல்.. ஒப்பட்டு செய்வது எப்படி?..

ராசி மண்டலத்தில், முதல் ராசியான மேஷத்தில் சூரியன் பிரவேசிப்பது சித்திரை முதல் நாளாகும். அதனால்தான் நாம் சித்திரை முதல் நாளை சித்திரை திருநாளாகக் கொண்டாடுகிறோம். பிரம்மதேவர் உலகைப் படைத்தது சித்திரை முதல் நாளில் என்கின்றன சில ஞான நூல்கள்.

இந்தத் தினத்தில் திறந்தவெளியில் சூரிய பகவானுக்குப் பூஜைகள் செய்வார்கள். தமிழகத்தில் மட்டுமல்ல; இந்தியா முழுவதும் சூரிய வழிபாடுகள் கோலாகலமாக நடக்கும். கர்நாடகாவிலுள்ள குடகு பகுதியில் சித்திரை திருநாள் மார்ச்சிலும், மீண்டும் ஏப்ரல் மாதத்திலுமாக இருமுறை கொண்டாடப்படுகிறது. இந்தத் திருநாளில் கர்நாடகாவில் ஒப்பட்டு பலகாரம் முக்கிய இடம்பிடிக்கிறது. சரி, இப்போது ஒப்பட்டு எப்படி செய்வது என்று இப்பதிவில் காண்போம்.

தேவையான பொருட்கள்

  • சீரோட்டி ரவை (அ) மைதா – ஒரு கப்
  • நெய் – ஒன்றரை டீஸ்பூன்
  • எண்ணெய் – கால் கப்
  • மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
  • தண்ணீர் – மாவில் கலந்துகொள்ள போதுமான அளவு
  • உப்பு – ஒரு சிட்டிகை

பூரணம் செய்ய

  • கடலைப்பருப்பு – ஒரு கப்
  • துருவிய வெல்லம் – ஒன்றே கால் கப்
  • ஏலக்காய்த்தூள் – சிறிதளவு

செய்முறை

மைதா (அ) ரவையுடன் உப்பு, நெய், மஞ்சள்தூள் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். தண்ணீரைச் சிறிது சிறிதாகச் சேர்த்து, மாவை மென்மையாகப் பிசைந்து, ஈரத்துணியால் மூடி ஒரு மணி நேரம் வைக்கவும். மென்மையாக ரப்பர்போல் வரும் வரையில் மாவை நன்கு பிசைந்துகொள்ளவும். பிறகு மாவில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் உறிஞ்சிக்கொள்ளும் வரையில் மாவைப் பிசைந்து, மூடிபோட்டு மேலும் மூன்று மணி நேரம் வைக்கவும்.

பிரஷர் குக்கரில் போதிய அளவு தண்ணீர் சேர்த்து கடலைப்பருப்பை ஒரு விசில் வரும் வரை வேகவைக்கவும். வேகவைத்த கடலைப்பருப்புடன் துருவிய வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து மிக்ஸி யில் நைசாக அரைக்கவும். பூரணத்தில் தண்ணீர் அதிகமாக இருந்தால் வெறும் வாணலியில் பூரணத்தைப் போட்டு தண்ணீரை சுண்ட வைக்கவும். பூரணத்தை ஒரே அளவுள்ள உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.

தயார்செய்து வைத்திருக்கும் மாவை எடுத்து ஒரே அளவுள்ள உருண்டைகளாக உருட்டவும். மாவு உருண்டையைத் தட்டி அதில் ஒரு பூரண உருண்டையை வைக்கவும். பக்கவாட்டில் உள்ள மாவை உள்ளே மடித்து உருண்டைகளாக்கவும். எண்ணெய் தடவிய வாழையிலையின் மீது வைத்து கைகளால் தட்டி போளி போல் செய்யவும்.

அடுப்பில் தோசைக்கல்லைப் போட்டு சூடாக்கிக்கொள்ளவும். வாழையிலையோடு மாவை எடுத்து தோசைக்கல்லின் மேல் போட்டு இலையை மட்டும் எடுத்துவிடவும். சுற்றி சிறிதளவு நெய் விட்டு இரண்டு பக்கங்களும் வேகும்படி நன்றாகச் சுட்டெடுக்கவும்.

இதையும் படிங்க:  தல அஜித் நடித்த உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் யார் தெரியுமா..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: