தமிழ்நாடுபொழுதுபோக்கு

டேஸ்டியான பறங்கிக்காய்க் குழம்பு செய்வது எப்படி?..

எந்தெந்த சூழ்நிலையில் எப்படி வாழ்வது என்பதை உணவு விஷயத்திலும் நமக்கு வழிகாட்டியுள்ளனர் நம் முன்னோர்கள். சூழ்நிலைக்கேற்ப வாழக் கற்றுக்கொள்வது சிறப்பு. உதாரணத்துக்கு அந்தந்த பருவகால காய்கறிகளைப் பயன்படுத்தி குழம்பு வகைகளையும் செய்து ருசிப்பது அதைவிட சிறப்பு. அவற்றில் ஒன்று இந்த பறங்கிக்காய்க் குழம்பு.

தேவையானவை

பறங்கிக்காய் – ஒரு கீற்று (தோலுடன் பெரிய சதுரத் துண்டுகளாக்கவும்)

தோலுரித்த சின்ன வெங்காயம் – 15

பூண்டு – 10 பல்

தக்காளி – 3 (பொடியாக நறுக்கவும்)

புளி – பெரிய நெல்லிக்காய் அளவு (ஊறவைத்துக் கரைத்து வடிகட்டவும்)

சாம்பார் பொடி – 4 டீஸ்பூன்

வறுத்துப் பொடித்த வேர்க்கடலை – 2 டீஸ்பூன்

எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

தாளிக்க

கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், வெந்தயம் – தலா கால் டீஸ்பூன்

பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை.

செய்முறை

குக்கரில் எண்ணெய்விட்டு தாளிப்புப் பொருட்களைத் தாளிக்கவும். அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம், தக்காளி, பறங்கிக்காய் சேர்த்து வதக்கவும். பிறகு, சாம்பார் பொடி சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். அதனுடன் உப்பு சேர்த்து, புளிக்கரைசல், 2 கப் தண்ணீர் ஊற்றி மூடி ஒரு விசில்விட்டு இறக்கவும். குக்கரில் ஆவி அடங்கிய பிறகு திறந்து, லேசாக மசித்து, வேர்க்கடலைப் பொடியைத் தூவி மீண்டும் கொதிக்கவிடவும். குழம்பு நன்றாக கெட்டியானதும் இறக்கவும்.

Back to top button
error: Content is protected !!