பொழுதுபோக்குதமிழ்நாடு

சூப்பரான முட்டை கட்லெட் குழம்பு செய்வது எப்படி?..

குழம்பில் பல்வேறு வெரைட்டி உள்ளது. அந்த வகையில் இன்று முட்டை கட்லெட் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த குழம்பை செய்வது சுலபம். சுவையோ அலாதி.

தேவையான பொருட்கள் :

முட்டை – 5
பொட்டுகடலைமாவு – அரை கப்
தேங்காய் – 1 (துருவவும்)
பெ.வெங்காயம் – 3
கேரட் – 1 (துருவவும்)
தக்காளி – 3 (நறுக்கவும்)
மிளகாய் – 5 (நறுக்கவும்)
நறுக்கிய இஞ்சி – சிறிதளவு
சோம்பு – 1 டீஸ்பூன்
தனியா – 2 டீஸ்பூன்
கசகசா – 1 டீஸ்பூன்
பூண்டு – 6 பல்
சீரகம் – 2 டீஸ்பூன்
கொத்தமல்லி தழை,
கறிவேப்பிலை – தேவைக்கு

செய்முறை:

தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். கேரட்டை துருவிக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து சிறுதீயில் இஞ்சி, பூண்டு, கசகசா, தனியா, சோம்பு போன்றவற்றை நன்றாக வறுத்து அரைத்துக்கொள்ளவும்.

அதுபோல் தக்காளி, மிளகாய், தேங்காய் துருவல் ஆகியவற்றையும் வதக்கி அரைத்துக்கொள்ளவும். முட்டைகளை அடித்து நன்றாக கலக்கி அதனுடன் பொட்டு கடலை மாவு, கேரட், உப்பு, மிளகாய் விழுது ஆகியவற்றை சேர்த்து கிளறவும்.

சிறு சிறு கிண்ணங்களில் தெய் தடவி அதில் முட்டை கலவையை ஊற்றி இட்லி தட்டில் கட்லெட் பதத்துக்கு வேக வைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் சிறிது இஞ்சி, பூண்டு விழுது, சீரகம் சேர்த்து தாளிக்கவும்.

பின்னர் வெங்காயத்தை கொட்டி பொன்னிறமாக வதக்கவும். அதனுடன் அரைத்த மசாலா கலவையை கொட்டி உப்பு, மஞ்சள் தூள்தூவி இரண்டு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

நன்கு கொதித்து மசாலா வாசம் நீங்கியதும் இறக்கி அதனை அகன்ற பாத்திரத்தில் கொட்டி அதனுள் முட்டை கட்லெட்டுகளை போட்டு கால் மணி நேரம் ஊற வைக்கவும். கடைசியாக அதில் கொத்தமல்லி தழையை தூவி பரிமாறலாம்.

Back to top button
error: Content is protected !!