ஆன்மீகம்

மகாலட்சுமி விரதம், பூஜை செய்வது எப்படி?

அலைகடலிலிருந்து தோன்றியதால், மகாலட்சுமிக்கு அலை மகள் என பெயர் வந்தது. மகாலட்சுமி வரங்களை அள்ளிக்கொடுப்பதற்கு பிரசித்தி பெற்ற தெய்வம் என்பதால் லட்சுமியை நினைத்து மேற்கொள்ளும் விரதம் லட்சுமி விரதம் என்று அழைக்கப்படுகிறது. மகாலட்சுமி விரத பூஜையை நெறி தவறாமல் செய்து வந்தால் மகாலட்சுமியின் பரிபூரண அருள் நிச்சயம் கிடைக்கும். இந்த விரதத்தில் கலந்து கொள்ளும் அனைத்து திருமணமான பெண்களும் தங்கள் மாங்கல்ய பலம் நிலைக்கவும், வீட்டில் சுபீட்சம் நிலைத்திருக்கவும் வேண்டி அதிகம் கடைபிடிக்கின்றனர். அதையடுத்து, லட்சுமி விரதத்தை எப்படி கடைபிடிப்பது? எவ்வாறு வழிபட வேண்டும்?

வழிபாடு

லட்சுமி விரதம் மேற்கொள்ளும்போது நம் வாழ்வில் அன்பு, அமைதி, புகழ், இன்பம், வலிமை ஆகியவை நிறைந்திருக்கும் என்பது ஐதீகம்.

சிவனுக்கு வில்வம், விஷ்ணுவுக்கு துளசி என்பதை போல மகாலட்சுமிக்கு அருகம்புல் மீது அதிக பிரியம் உண்டு.

ஆவணி மாத கடைசி வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமி விரதம் கடைபிடிப்பதற்கு முன்பாக வீட்டை நன்கு சுத்தமாகக் கழுவி மாக்கோலமிட்டு விளக்கேற்றி வீடெல்லாம் வாசனை புகை மணக்க செய்ய வேண்டும்.

ஒரு தாம்பாளத்தில் அரிசி பரப்பி, அதன் மேல் கலசம் வைத்து, பழம், வெற்றிலை, பாக்கு வைக்க வேண்டும். பொங்கல், பாயாசம், அப்பம், வடை, கொழுக்கட்டை, லட்டு, தயிர், பசும்பால், நெய், தேன், கற்கண்டு ஆகிய நிவேதனப் பொருட்களை கலசம் முன் வைக்க வேண்டும். ஆரஞ்சு, மாதுளை, விளாம்பழம், மாம்பழம், திராட்சை ஆகிய பழ வகைகளையும் நிவேதனத்துக்காக வைக்கலாம்.

விரத பூஜைக்கு தேவையான எல்லாப் பொருட்களையும் தயார் நிலையில் எடுத்து வைத்து கொண்ட பிறகு முதலில் விநாயகர் பூஜையை நடத்த வேண்டும்.

அதன்பிறகு மகாலட்சுமியை பூக்களாலும், தூப தீபங்களாலும் ஆராதிக்க வேண்டும்.

லட்சுமி விரதம் மேற்கொள்ளும் நாள் முழுவதும் லட்சுமியின் 108 போற்றி, அஷ்ட லட்சுமி ஸ்தோத்திரம், மகாலட்சுமி ஸ்தோத்திரம், போன்றவற்றை கூறிக் கொண்டிருக்க வேண்டும்.

‘‘மகாலட்சுமி தாயே எங்கள் வீட்டில் நிரந்தரமாக தங்க வேண்டும். எங்களுக்கு எல்லா செல்வங்களையும் நீ தர வேண்டும்’’ என்று மனம் உருகி வணங்க வேண்டும். பின்னர் பூஜையை நிறைவு செய்து அனைவரும் பிரசாதம் எடுத்துக்கொண்டு விரதத்தை முடிக்க வேண்டும்.

பலன்கள்

இவ்வாறு பக்தி சிரத்தையுடன் லட்சுமி விரதம் மேற்கொள்வதால் மாங்கல்ய பலம், செல்வச்செழிப்பு, ஐஸ்வர்யங்கள் கிடைத்து வாழ்வு மேலோங்கும் என்பது ஐதீகம்.

லட்சுமி விரத பூஜையை தவறாமல் செய்து வந்தால், மகாலட்சுமியின் பரிபூரண அருள் நிச்சயம் கிடைக்கும்.

இதையும் படிங்க:  எந்த கிழமையில் என்ன தீப வழிபாடு பலன் கொடுக்கும்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: