தமிழ்நாடுமாவட்டம்

வெங்காயம் விலை மீண்டும் உயர்வு.. கவலையில் இல்லத்தரசிகள்..

ஈரோடு காய்கறி மார்க்கெட்டில் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது. தமிழகத்தில் வெங்காயத்தின் விலை கடந்த அக்டோபர் மாதம் திடீரென கிடுகிடுவென உயர்ந்துவிட்டது. தமிழகத்தில் சின்ன வெங்காயம் கடந்த அக்டோபர் மாதம் அதிகபட்சமாக கிலோ ரூ.130 வரை விற்கப்பட்டது. தொடர் மழை, வட மாநிலங்களில் இருந்து வெங்காய வரத்து குறைவே வெங்காயம் விலை உயர்ந்ததற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், படிப்படியாக விலை குறைந்து கடந்த சில வாரங்களாக கிலோ ரூ.40 முதல் ரூ.45ஆக விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக மீண்டும் சின்ன வெங்காய விலை உயர்ந்து வருகிறது. ஈரோடு காய்கறி மார்க்கெட்டில் கடந்த வாரத்தைவிட இரண்டு மடங்கு உயர்ந்து கிலோ ரூ.80 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பெரிய வெங்காயத்தின் விலையும் கிலோ 30 ரூபாயிலிருந்து 50 ரூபாயாக உயர்ந்துள்ளது. வட மாநிலங்களிலிருந்து வெங்காய வரத்து குறைந்திருப்பதே இந்த விலை உயர்வுக்குக் காரணம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு மார்க்கெட்டுக்கு தினந்தோறும் 150 டன் அளவுக்கு வெங்காயம் கொண்டு வரப்பட்டது. ஆனால், அதன் வரத்து தற்போது பாதியாக குறைந்துள்ளது. வெங்காயத்தின் விலை மீண்டும் உயர்ந்து வருவதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.

Back to top button
error: Content is protected !!