தோல் நோய்களுக்கு வேம்பு அருமருந்து..!

 

தோல் நோய்களுக்கு மருந்தாக அமைவதும், பொடுகு பிரச்சனையை போக்க கூடியதும், கால் ஆணி, சேற்றுப்புண், தீக்காயம், வயிற்றுப்போக்கை குணப்படுத்த கூடியதுமான வேப்பிலையின் நன்மைகள் குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

சிறிது வேப்பங்கொழுந்துடன் கால் ஸ்பூன் வசம்பு பொடி, பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிக்கட்டி குடித்து வர வயிற்றுப்போக்கு குணமாகும். வசம்பு வாயுவை அகற்றி வயிற்று கோளாறுகளை போக்கும் தன்மை கொண்டது.

 

வேப்பம் பட்டையை பயன்படுத்தி தோல் நோய்களுக்கான மருந்து தயாரிக்கலாம். வேப்பம் பட்டையை துண்டுகளாக்கி நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி தண்ணீரில் ஊற்றி குளித்துவர சொரியாசிஸ் போன்ற தோல்நோய்கள் குணமாகும். தோலில் ஏற்படும் அரிப்பு, தடிப்பு போன்ற பிரச்னைகள் சரியாகும். வேப்பம் பட்டை நுண்கிருமிகள், பூஞ்சை காளான்களை போக்கும் தன்மை கொண்டது.

வேப்பிலையை பயன்படுத்தி தலையில் ஏற்படும் அரிப்பை போக்கும் மருந்து தயாரிக்கலாம். வேப்பிலையை கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் ஆற வைத்து வேப்பிலையை நன்றாக கசக்கி வடிகட்டியபின் தண்ணீரில் ஊற்றி குளிக்கலாம். இதனால் தலையில் ஏற்படும் அரிப்பு, பொடுகு இல்லாமல் போகும்.

 

வேப்பெண்ணெய்யை பயன்படுத்தி கால் ஆணி, சேற்றுப் புண்களுக்கான மருந்து தயாரிக்கலாம். சிறிது மஞ்சள் பொடியுடன் வேப்பெண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கவும். சேற்றுப்புண், நகச்சுற்று, கால் ஆணி இருக்கும் இடத்தில் இதை தடவி வர பிரச்னைகள் குணமாகும்.

வேப்பிலையை பயன்படுத்தி தீக்காயங்களுக்கான மருந்து தயாரிக்கலாம். வேப்பிலை பசையுடன், சிறிது மோர் சேர்க்கவும். இதை பூசி வர தீக்காயம் விரைவில் குணமாகும். நீர்நிலைகளில் கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. வேப்பிலையை காயவைத்து தீயில் இட்டு புகையை வீடுகளில் பரவுமாறு செய்தால் கொசுத்தொல்லை இருக்காது. கிருமிகள் அழியும்.

 
 
Exit mobile version