தமிழர்கள் பெயர் வைப்பதில் கெட்டிக்காரர்கள். அதனால் தானோ என்னமோ, ஒரே ஒரு எண்ணெய்க்கு மட்டும் ‘நல்லெண்ணெய்’ எனப் பெயர் வைத்து உள்ளனர். காரணம், அது தரும் நன்மைகள் ஏராளம், தாராளம். அதனால் தான் இன்றைய நவீன காலத்தில் கூட, நல்லெண்ணெய் மிகவும் பிரபலமான பல்வேறு க்ரீம்கள், ஆயின்மென்ட், சோப்புகள், லோஷன் மற்றும் பாடி ஸ்கரப் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது.
நல்லெண்ணெயில் வைட்டமின் ஈ சத்து அதிகம் உள்ளதால் மிகச்சிறந்த ஆன்டி ஆக்சிடென்ட் ஆக செயல்படுகிறது. இது சருமத்திற்குப் பல விதங்களில் நன்மையை செய்கிறது. வாரத்தில் ஒரே ஒரு முறை நல்லெண்ணெய் தேய்த்துக் குளித்தால் போதும் ‘சருமம்’ என்றும் இளமைப் பொலிவுடன் காட்சி தரும். அதனால் தான் ‘சனி நீராடு!’ என்கிறது இலக்கியம். அப்படி வாரத்திற்கு ஒரு முறை நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் நமக்குக் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?!… வாருங்கள் சற்றே அலசுவோம்.
வாரத்திற்கு ஒருமுறையாவது தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து குளித்தால் உடல் சூடு குறையும். தலைமுடி வறட்சி நீங்கும். பொடுகு முற்றிலும் நீங்கும். அத்துடன், நல்லெண்ணெய் சருமத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்த உதவுகிறது, முகப்பரு மற்றும் பருக்களால் வரும் தழும்புகளை அது தடுக்கிறது. தினமும் 1 டீஸ்பூன் நல்லெண்ணெயுடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பஞ்சில் தொட்டு பருக்கள் உள்ள இடத்தில் தடவி ஊற வைத்து கழுவுங்கள். இப்படி தினமும் செய்து வந்தால், பருக்கள் குறைவதோடு, தழும்புகளும் குறையும் என்கிறது சித்த மருத்துவம்.
மேலும், நல்லெண்ணெய் சரும வறட்சியை தடுக்க வல்லது. இதனை வாரம் ஒரு முறை பயன்படுத்தி ஊறவைத்துக் குளித்து வந்தால், சருமத்தின் இளமைத் தன்மை தக்க வைக்கப்பட்டு, சருமம் புத்துணர்ச்சியுடன் காணப்படும். தேவைப் படும் பட்சத்தில், ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு குலுக்கிக் கொள்ள வேண்டும். பின் அதை முகம், கை, கால்களில் ஸ்ப்ரே செய்து கொள்ளுங்கள். இப்படி தினமும் பயன்படுத்தி வருவதால், சருமம் வறட்சி அடைவதைத் தடுக்கலாம்.
பஞ்சுருண்டையில் நல்லெண்ணெயை நனைத்து, முகத்தை தினமும் துடைத்து எடுங்கள். இப்படி தினமும் இரவில் படுக்கும் முன் செய்து வந்தால், மேக்கப் முழுமையாக நீங்குவதோடு, சருமமும் வறட்சியடையாமல் இருக்கும். இதை விடுத்து, தேவை இல்லாமல் காசு கொட்டி வாங்கிய செயற்கை மேக்கப் ரிமூவரை பயன்படுத்திக் கொண்டு இருக்காதீர்கள். காரணம், செயற்கை மேக்கப் ரிமூவர் எண்ணற்ற பக்க விளைவுகளைத் தர வல்லது. மேலும், நல்லெண்ணெய் உதடுகளுக்கு ஒரு நல்ல நிறத்தை வழங்கும். ஒருவர் தினமும் நல்லெண்ணெயை உதடுகளுக்கு பயன்படுத்தி வந்தால், உதடுகள் மென்மையாகவும், பிங்க் நிறத்திலும் இருக்கும். அதற்கு நல்லெண்ணெயை தினமும் இரவில் படுக்கும் முன் உதட்டில் தடவிக் கொள்ளுங்கள். ஆனால் நல்லெண்ணெயைப் பயன்படுத்திய உடனேயே பலன் கிடைக்காது. தினமும் பயன்படுத்தி வந்தால் தான் நீங்கள் நல்ல பலனைக் காண இயலும். குதி கால் வெடிப்பிற்குக் கூட நல்லெண்ணெய் ஒரு நல்ல தீர்வாக உள்ளது. அந்த வகையில், நல்லெண்ணெயை ரோஸ் வாட்டருடன் சேர்த்து குதிகால் வெடிப்பை சரிசெய்யலாம். அதற்கு நல்லெண்ணெய் மற்றும் ரோஸ் வாட்டரை சரிசம அளவில் எடுத்துக் கலந்து, தினமும் இரவில் படுக்கும் முன் குதிகாலில் தடவுங்கள். மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள். இதனால் விரைவில் குதிகால் வெடிப்பு நீங்கும்.
கோடையில் சருமம் கருமை ஆகும். இது அனைவருமே பெரும்பாலும் சந்திக்கும் பிரச்சனை தான். இதைத் தடுப்பதற்கு நல்லெண்ணெய் பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவை ஒரு Bowl-ல் போட்டு, அத்துடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து கலந்து, கருமையான பகுதிகளில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இதன் மூலம் கோடை தரும் கருமையில் இருந்தும் நாம் தப்ப இயலும். தலைமுடி வறட்சி அடைந்து உடையாமல் இருக்கவும் கூட நல்லெண்ணெய்யை பயன்படுத்த இயலும். இதற்கு, உங்கள் தலைமுடிக்கு தேவையான அளவு நல்லெண்ணெயை தலையில் தடவி, நன்கு மசாஜ் செய்து, 30 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவுங்கள். இப்படி வாரத்திற்கு ஒருமுறை தலைமுடிக்கு நல்லெண்ணெய் மசாஜ் செய்து வந்தால், தலைமுடி வறட்சியின்றி மென்மையாக இருக்கும். சீக்கிரத்தில் உடையாது. தேவை இல்லாமல் முடியும் கொட்டாது.
கண்கள் சோர்வடைந்து, கருவளையங்களுடன் காணப்படும் பட்சத்தில் அதற்கும் கூட நல்ல தீர்வாக இருக்கிறது நல்லெண்ணெய். இதற்கு, நல்லெண்ணெயை ப்ரிட்ஜில் வைத்து குளிரச் செய்து, பஞ்சுருண்டையை பயன்படுத்தி, கண்களின் மீது மிக மிருதுவாக – பக்குவமாகத் தடவ வேண்டும். இப்படி செய்தால், வீங்கிய கண்களின் வீக்கம் குறைவதோடு, கருவளையங்களும் நீங்கிவிடும். நல்லெண்ணெய் அடிப்படையில் ஒரு ஆண்டி-பையாட்டிக். இதனை வெறும் வயிற்றில் குடித்து வர தோல் சம்மந்தமான பிரச்சனைகள் தீரும். வயிற்றில் உள்ள கிருமிகள் மரணிக்கும். இப்படி எண்ணற்ற நன்மைகள் கொண்ட நல்லெண்ணெய்யை நாம் அனுதினமும் பயன்படுத்துவோம். நம் பாரம்பரியம் காப்போம்.
Leave a Comment