மங்குஸ்தான் பழம் இனிப்பும், இலேசான புளிப்பும், சாற்றுத்தன்மையும் சிறிதளவும் நார்த்தன்மையுமுள்ள பழமாகவும் இருக்கும். மங்குஸ்தான் பழம் சிவப்பும், கருநீலமும் கலந்த வண்ணத்தில், உருண்டை வடிவில் பார்க்க அழகாகவும், உள்ளே உள்ள கனி வெள்ளை நிறத்தில் சுவைக்க இனிதாகவும் இருக்கும். இதன் பழத்தின் ஓடு போன்ற தோல் பகுதியை உடைத்தால் மூன்று அல்லது நான்கு சுளைகள் வெள்ளை நிறம் கொண்ட கனி இருக்கும். இதற்கு ‘சூலம்புளி’ என்ற பெயரும் உண்டு.
மங்குஸ்தானில் கலோரி – 63%, வைட்டமின் சி- 12%, நார்ச்சத்து – 1.3 கி, இரும்பு சத்து – 0.57 மி.கி, கால்சியம் – 16 மி.கி, சோடியம் – 7 மி.கி, பொட்டாசியம் – 48 மி.கி போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.
சுவை மிகுந்த மங்குஸ்தான் பழத்தின் 100 கிராம் சதையில் 63% கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது. இது உடலுக்கு தேவையான உடனடி ஆற்றலை வழங்கக்கூடியது.
மங்குஸ்தான் பழத்தில் உடலுக்கு கேடு விளைவிக்கும் கொலஸ்டிரால் போன்ற கெட்ட கொழுப்புகள் அறவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் உள்ள பெக்டின் எனப்படும் நார்ச் சத்துப் பொருள் உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்புகளைக் கரைத்து கொலஸ்டிரால் அளவை சமப்படுத்துகிறது.
உடல் கொழுப்பை அல்லது உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு மங்குஸ்தான் பழம் ஒரு சிறந்த வரபிரசாதம். மங்குஸ்தான் பழத்தைத் தினமும் ஒரு முறை என மூன்று வாரங்களுக்குச் சாப்பிட்டு வந்தால் உடல் எடையைக் குறைக்க முடியும்.
மங்குஸ்தான் பழத்தில் அதிக அளவு ‘வைட்டமின் சி’ சத்து அடங்கியுள்ளது. இது புளூ காய்ச்சல் போன்ற நோய்த் தொற்றுகள் ஏற்படாமல் காக்கும். உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஆக்சிஜன் பிரீ-ரெடிகல்களை விரட்டும் தன்மையும் ‘வைட்டமின் சி’க்கு உண்டு.
மங்குஸ்தான் பழத்தில் நார்ச் சத்து அதிகளவு உள்ளது. மங்குஸ்தான் பழங்களை அதிகம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனைகள் நீங்கும்.
உடற் செல்கள் வளவளப்புத் தன்மையுடன் இருப்பதற்கும், இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் ஒரே சீராக கட்டுக்குள் இருக்கவும் பொட்டாசியம் தாது மிகவும் அவசியமானது. இது பக்கவாதம் மற்றும் இதய வியாதிகள் ஏற்படாமலும் காக்கும் ஆற்றல் கொண்டது.
கண்களின் பார்வைத் திறன் தெளிவாக இருக்க வைட்டமின் A, அஸ்கார்பிக் அமிலம், நிகோடினிக் அமிலம் போன்றவை மிகவும் முக்கியம். மங்குஸ்தான் பழத்தில் இந்த சத்துக்கள் அதிகம் உள்ளன. எனவே, மங்குஸ்தான் பழங்களைத் தினம்தோறும் அல்லது வாரத்திற்கு இரண்டு முறையாவது சாப்பிட்டு வருவது கண் பார்வை திறனுக்கு மிகவும் உகந்தது.
மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் இரத்தப் போக்கை குறைக்க மங்குஸ்தான் பழம் உதவுகிறது. பருவ காலங்களில் மங்குஸ்தான் பழங்களை வாங்கி சாப்பிடுவது மிகவும் நல்லது.