நடைபயிற்சி பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. நடைப்பயிற்சியை விட சிறந்த இலகுவான உடற்பயிற்சி இல்லை என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். தினமும் குறைந்தது 30 நிமிடம் நடந்தால் போதும் 8 நன்மைகள் கிடைக்கும். அதை பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம்.
1. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் ப்ரிவென்டிவ் மெடிசினில் வெளியிடப்பட்ட ஆய்வில், ஒரு நாளைக்கு குறைந்தது 30 நிமிடங்கள் நடப்பது இதய நோய் அபாயத்தை 19 சதவிகிதம் குறைக்கும் என்று கூறுகிறது. நடைப்பயிற்சி இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், எல்.டி.எல் கொழுப்பைக் குறைக்கவும், இதய ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும் உதவும்.
2. எடைக் கட்டுப்பாடு
ஒவ்வொருவரும் 30 நிமிட நடைப்பயிற்சியை அன்றாட வழக்கத்தில் சேர்த்துக் கொண்டால் ஆரோக்கியமான எடையைப் பராமரிக்க முடியும். நடைபயிற்சி கலோரிகளை எரிக்கிறது மற்றும் எடை குறைக்கிறது. இருப்பினும், எத்தனை கலோரிகள் எரிக்கப்படுகின்றன என்பது நடைபயிற்சி நபரின் எடை மற்றும் வேகத்தைப் பொறுத்தது. சராசரியாக, ஒருவர் அரை மணி நேரம் நடப்பதால், 150 கலோரிகள் எரிக்கப்படுகின்றன.
3. மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
நடைபயிற்சி உடலுக்கு மட்டுமல்ல… மன ஆரோக்கியத்திற்கும் நல்லது. JAMA Psychiatry நடத்திய ஆய்வின்படி… தினமும் நடைப்பயிற்சி செய்வதன் மூலம் மனச்சோர்வு மற்றும் பதட்டம் குறையும். மனிதர்களின் உணர்ச்சிகளை ஒழுங்குபடுத்தும் எண்டோமார்பின்களை நடைபயிற்சி தூண்டுவதாக கண்டறியப்பட்டுள்ளது. நடைபயிற்சி மன அழுத்தத்தையும் போக்குகிறது.
4. தசைகள் மற்றும் எலும்புகளின் வலிமைக்கு பங்களிக்கிறது
நீங்கள் தொடர்ந்து நடந்தால், தசைகள் மற்றும் எலும்புகள் வலுவடையும். குறிப்பாக, கால்கள் மற்றும் கீழ் முதுகில் வலுவூட்டுவதற்கு நடைபயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நடைபயிற்சி எலும்பு அடர்த்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தையும் குறைக்கிறது.
5. செரிமான மண்டலத்தை மேம்படுத்துகிறது
உணவு உண்ட பிறகு அரை மணி நேரம் நடந்தால், செரிமான அமைப்பு சீராக வேலை செய்கிறது. நடைபயிற்சி செரிமான மண்டலத்தில் உள்ள தசைகளை தூண்ட உதவுகிறது. மேலும், குடல் இயக்கம் அதிகரிக்கிறது. இதனால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். தினமும் 30 நிமிடம் நடைப்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் வயிற்று உப்புசம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் என லண்டன் பல்கலைகழகத்தின் ஆய்வு கூறுகிறது.
6. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
நடைப்பயிற்சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் ஸ்போர்ட்ஸ் மெடிசினில் வெளியிடப்பட்ட ஆய்வில், தினசரி நடைபயிற்சி செய்பவர்களுக்கு குளிர்காலத்தில் நோய்வாய்ப்படும் வாய்ப்பு குறைவு என்று தெரியவந்துள்ளது. ஒரு நாளைக்கு குறைந்தது 30 நிமிடங்களாவது நடப்பவர்களுக்கு சளி மற்றும் பிற சுவாச நோய்த்தொற்றுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு.
7. படைப்பாற்றலை அதிகரிக்கிறது
நடைபயிற்சி உடல் நலன்களை மட்டுமல்ல, மனநல நன்மைகளையும் கொண்டுள்ளது. தினமும் நடப்பவர்களிடம் படைப்பாற்றல் மேம்படும். மேலும், அவர்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பதாக ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். நடைபயிற்சி சராசரியாக 60 சதவிகிதம் படைப்பாற்றலை அதிகரிக்கிறது என்பதை அவர்கள் வெளிப்படுத்தினர். அமைதியான சூழலில் நடப்பது மனதை புத்துணர்ச்சியூட்டுவது மட்டுமின்றி சிறந்த யோசனைகளையும் தருகிறது.
8. நீண்ட ஆயுட்காலம்
நீண்ட காலம் வாழ விரும்பினால்… நடைப்பயிற்சியை உங்கள் அன்றாட நடவடிக்கைகளில் ஒரு அங்கமாக்கிக்கொள்ள மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். PLOS மெடிசின் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, தினமும் 30 நிமிடங்கள் நடப்பது, அகால மரணத்தின் அபாயத்தை 20 சதவிகிதம் குறைக்கும். நடைபயிற்சி கார்டியோ வாஸ்குலர் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் எடை மேலாண்மைக்கும் உதவுகிறது. குறிப்பாக, இது நீண்ட ஆயுளை ஏற்படுத்துகிறது.