மாவட்டம்

நாமக்கல்: ரூ.10 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்!

நாமக்கல் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், குட்கா உள்ளிட்ட கஞ்சா விற்பனையை தடுக்க காவல்துறைக்கு மாவட்ட எஸ்.பி சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவிட்டுள்ளார். இதையொட்டி மாவட்டம் முழுவதும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், ராசிபுரம் நகராட்சி காட்டூர் ரோட்டை சேர்ந்த செந்தில் (39) என்பவர் தனது மளிகை கடையில் குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. டிஎஸ்பி பாலமுருகன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சுகவனம், எஸ்ஐக்கள் மாணிக்கம், தங்கம், போலீசார் செந்திலுக்கு சொந்தமான மளிகை கடையில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது அவரது கடையில் 100 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பெங்களூருவில் இருந்து ராசிபுரத்திற்கு கண்டெய்னர் லாரியில் குட்கா பொருட்கள் கடத்தப்பட்டு வந்தது என தெரியவந்துள்ளது. அதன்பேரில் போலீசார் சேலம் ரோட்டில், வைரமலை ஆஞ்சநேயர் கோவில் அருகே வாகன தனிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த கண்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 500 கிலோ குட்கா பொருட்கள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. லாரியுடன் குட்கா பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

குட்கா பதுக்கி வைத்திருந்த மளிகை வியாபாரி செந்தில், லாரி டிரைவர் மணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள 600 கிலோ குட்காவை ராசிபுரம் போலீஸார் பறிமுதல் செய்தனர்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: