தமிழ்நாடு

ரூ.2000 உதவித்தொகையுடன் தமிழ் பல்கலையில் பட்டப்படிப்பு – அறிவிப்பு வெளியீடு!!

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் இளங்கலை அல்லது முதுகலை தமிழ் படிக்க மாதந்தோறும் ரூ.2000 உதவித்தொகை வழங்கப்படும் என துணைவேந்தர் கோ.பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் 1981ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தஞ்சாவூரில் 972.7 ஏக்கர் நிலப்பரப்பில் இப்பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. தமிழ் மொழி, பண்பாடு போன்ற துறைகளில் உயர் ஆய்வை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. தமிழ் பல்கலைக்கழகத்தின் புலக்கட்டடங்கள் அவற்றின் உருவ அமைப்பில் “தமிழ்நாடு” என்ற சொல்லின் எழுத்துக்களைப் போன்று வடிவமைக்கபட்டுள்ளது.

இந்நிலையில் அந்த பல்கலைக்கழகத்தில் மூன்றாண்டு இளங்கலை படிப்புகளும், இரண்டாண்டு முதுகலை படிப்புகளும் பல பாடப்பிரிவுகளில் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் இளங்கலை மற்றும் முதுகலை என ஒருங்கிணைந்த ஐந்தாண்டு தமிழ் பயிலும் மாணவர்களுக்கு அரசு உதவியுடன் மாதந்தோறும் உதவித்தொகை ரூ.2000 வழங்கப்படும். இந்த படிப்பில் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து அப்பல்கலைக்கழக துணைவேந்தர் கோ.பாலசுப்பிரமணியன் கூறுகையில், தமிழ் பாடப்பிரிவில் இரண்டாண்டு முதுகலை படிக்கும் மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.2000 ஊக்க உதவித்தொகை வழங்கப்படுகிறது. தமிழ் பல்கலைக்கழகத்தில் இந்த படிப்புகள் மட்டுமல்லாமல் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு வரலாறு படிப்பை 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் படிக்கலாம். மேலும் முதுகலையில் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல், மொழியியல், மெய்யியல், நிகழ்த்துக்கலை மற்றும் சுற்றுசூழல் மூலிகை அறிவியல் ஆகிய படிப்புகளுக்கும் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: