திருமணத்துக்கு மறுப்பு.. ஓடும் ரயிலில் தள்ளிவிடப்பட்ட காதலி..!

மும்பையில் திருமணம் செய்ய மறுத்த இளம்பெண்ணை, இளைஞர் ஒருவர் ரயில் தண்டவாளத்தில் தள்ளிவிட்டுச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி கேமராக்களில் படம்பிடிக்கப்பட்ட இந்த சம்பவம் கார் (Khar) ரயில் நிலையத்தில் நடந்துள்ளது.
மும்பையில் சுமேத் ஜாதவ் என்பவர், 21 வயது இளம்பெண்ணை காதலித்துள்ளார். இரண்டு வருடங்களுக்கு முன்பு அவர்கள் இருவரும் ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்தபோது காதலித்து வந்துள்ளனர். ஆனால், சுமேத் ஜாதவுக்கு குடிப்பழக்கம் இருப்பது அண்மையில் அந்த பெண்ணுக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரிடம் இருந்து அந்த பெண் விலகியுள்ளார். இருப்பினும், சுமேத் ஜாதவ் அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ளுமாறு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
பிப்ரவரி 19ஆம் தேதி அந்தேரி ஸ்டேஷனில் இருந்து கார் (Khar) ரயில் நிலையத்துக்கு சென்ற ரயிலில் அந்த பெண்ணை சுமேத் பின்தொடர்ந்து சென்றுதுள்ளார். அப்போது, தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி, அந்த பெண்ணை மிரட்டி இருக்கிறார் சுமேத் ஜாதவ். அவர் திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த சுமேத் ஜாதவ், அந்த பெண்ணை நடைமேடையில் இருந்து தரதரவென இழுத்து ரயில் தண்டவாளத்தில் தள்ளிவிட்டுள்ளார். அந்த இடத்தில் இருந்து அவர் தப்பிச் சென்றுள்ளார். நடை மேடைக்கும், ரயிலுக்கும் இடையில் சிக்கிய அந்த இளம்பெண் படுகாயம் அடைந்துள்ளார்.
அந்தப் பெண்ணுக்கு தலையில் காயம் ஏற்பட்டதால் 12 தையல்கள் போடப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட சுமேத் ஜாதவை 12 மணி நேரத்தில் போலீஸார் கைது செய்துள்ளனர்.