ஆன்மீகம்

காரிய வெற்றியைத் தருவார் விநாயகர்!!

சங்கடஹர சதுர்த்தியில், கணபதி வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். அருகம்புல் மாலை சார்த்தி ஆனைமுகனை வழிபடவேண்டும். இப்படி செய்து வர எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றியை அள்ளித் தந்தருள்வார் கணேச பெருமான்!

ஒவ்வொரு நாளும் அந்தந்த திதிகளின்படி விநாயகரின் வெவ்வேறு வடிவினை வணங்குவது கூடுதல் பலனை கொடுக்கும்.

கணபதியின் உருவங்கள் வேண்டிய வடிவில் இல்லையென்றால் அந்த வடிவின் பெயரை ஒன்பது முறை அந்த கணபதி முன் சொல்லலாம்.

அமாவாசை- நிருத்த கணபதி,

பிரதமை- பாலகணபதி,

துவிதை- தருண கணபதி,

த்ரிதியை- பக்தி கணபதி,

சதுர்த்தி- வீர கணபதி,

பஞ்சமி- சக்தி கணபதி,

சஷ்டி- துவிஜ கணபதி,

சப்தமி- சித்தி கணபதி,

அஷ்டமி- உச்சிஷ்ட கணபதி,

நவமி- விக்ன கணபதி,

தசமி- க்ஷிப்ர கணபதி,

ஏகாதசி- ஹேரம்ப கணபதி,

துவாதசி- லக்ஷ்மி கணபதி,

த்ரையோதசி- மகா கணபதி,

சதுர்த்தசி- விஜய கணபதி,

பௌர்ணமி- நித்ய கணபதி,

ஒருமுறை எமனின் மகன் அமலாசுரன். எமனின் மகன் என்ற கர்வத்தில் அனைவரையும் துன்புறுத்துவதுபோல் விநாயகரிடமும்வர விநாயகர் அவனை விழுங்கி விட்டார். அதனால் அவருக்கு வயிற்றில் கடும் எரிச்சல் ஏற்பட்டது. இதுகண்ட அகத்தியர் 21 அருகம் புற்களை விநாயகர் வயிற்றில் வைத்து பூஜை செய்ய எரிச்சல் மறைந்தது. அன்று முதல் விநாயகருக்கு அருகம்புல் சமர்பிப்பது வழக்கமானது.

அதேபோல், மகாவிஷ்ணுவின் சுதர்சன சக்கரத்தை விளையாட்டாக விழுங்கிவிட்டார். அது வயிற்றைக் கிழித்து விடுமோ என அனைவரும் நினைக்க பெருமாள் தன் காதுகளை கையால் பிடித்துக்கொண்டு உட்கார்ந்து உட்கார்ந்து எழுந்து கொள்வதைப் பார்த்த விநாயகர் வயிறு குலுங்கச் சிரிக்க விஷ்ணு சக்கரம் வெளிவந்தது. அன்று முதல் தோப்புக் கரணம் போடுதல் பழக்கமானது. தோர்ப்பி-கைகள். கர்ணம்-காது. தோர்ப்பிகர்ணம் மருவி தோப்புக்கரணம் ஆனது.

மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி நாள் வரும். இது விநாயகர் வழிபாட்டுக்குரிய அற்புதமான நாள். சதுர்த்தி அன்று விரதம் இருந்து துதிகளைப் படித்து வந்தால் நல்ல பலன்கள் கிட்டும். அன்று இரவு சந்திரனை தரிசித்தால் வழிபாட்டின் பூரண பலன் கிட்டும், நினைத்த நல்ல காரியங்கள் ஜெயம் உண்டாகும்

மாலையில், வீட்டின் அருகில் உள்ள பிள்ளையார் கோயிலுக்குச் சென்று, கணநாதரை தரிசிப்பது நன்மையை தரும். மேலும் நலம் அனைத்தும் வழங்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டையோ, சர்க்கரைப் பொங்கலோ நைவேத்தியம் செய்து வேண்டிக் கொள்ள, உங்கள் காரியம் அனைத்தையும் வெற்றியாக்கித் தந்தருள்வார் ஸ்ரீ விநாயக பெருமான்.

விநாயகர் கவசம்

வளர் சிகையைப் பராபரமாய் வயங்கு விநாயகர் காக்க!
வாய்ந்தசென்னி அளவுபடா அதிக சவுந்தர தேகம்
மதோத்கடர்தாம் அமர்ந்து காக்க! விளரற
நெற்றியை என்றும் விளங்கிய காசிபர் காக்க!

புருவந் தம்மைத் தளர்வில் மகோதரர் காக்க!
தடவிழிகள் பாலசந்திரனார் காக்க!
கவின்வளர் அதரம் கசமுகர் காக்க!
தாலங் கணக்கீரிடர் காக்க!

நவில்சிபுகம் கிரிசை சுதர் காக்க!
நனி வாக்கை விநாயகர்தாம் காக்க!
அவிர்நகை துன்முகர் காக்க!
அள் எழிற் செஞ்செவி பாச பாணி காக்க!

தவிர்தலுறாது இளங்கொடிபோல் வளர்மணி
நாசியைக் சித்திதார்த்தர் காக்க! காமருபூ
முகந்தன்னைக் குணேசர் நனி காக்க!
களம் கணேசர் காக்க!

வாமமுறும் இருதோளும் வயங்கு கந்தபூர்வசர்
தாம் மகிழ்ந்து காக்க! ஏமமுறு மணிமுலை
விக்கின விநாசர் காக்க! இதயந் தன்னைத்
தோமகலுங் கணநாதர் காக்க!

அகட்டினைத் துலங்கு ஏரம்பர் காக்க!
பக்கம் இரண்டையும் தராதரர் காக்க!
பிருட்டத்தைப் பாவம் நீக்கும் விக்கினகரன் காக்க!
விளங்கிலிங்கம் வியாளபூடணர்தாம் காக்க!

தக்க குய்யந்தன்னை வக்கிரதுண்டர் காக்க!
சகனத்தை அல்லல் உக்க கணபன் காக்க!
ஊருவை மங்களமூர்த்தி உவந்து காக்க!

தாழ்முழந்தாள் மகாபுத்தி காக்க!
இருபதம் ஏக தந்தர் காக்க! வாழ்கரம்
க்ஷிப்பிரப் பிரசாதனர் காக்க! முன்கையை
வணங்குவார் நோய் ஆழ்தரச்செய் ஆசாபுரகர் காக்க!

கேழ்கிளறும் நகங்கள் விநாயகர் காக்க!
கிழக்கினிற் புத்தீசர் காக்க!
அக்கினியிற் சித்தீசர் காக்க!
உமாபுத்திரர் தென் திசை காக்க!

மிக்க நிருதியிற் கணேசுரர் காக்க!
விக்கினவர்த்தனர் மேற்கென்னுந் திக்கதனிற் காக்க!
வாயுவிற் கசகன்னர் காக்க!
திகழ்வு தீசி தக்க நிதிபன் காக்க!
வடகிழக்கில் ஈசநந்தனரே காக்க!

ஏகதந்தர்பகல் முழுதுங் காக்க! இரவினும் சந்தி
இரண்டன் மாட்டும் ஒகையின் விக்கினகிருது காக்க!
இராக்கதர் பூதம் உறு வேதாளம் மோகினி பேய்
இவையாதி உயிர்த்திறத்தால் வருந்துயரும்

முடிவிலாத வேகமுறு பிணிபலவும் விலக்கு
பாசாங்குசர்தாம் விரைந்து காக்க!

மதி,ஞானம், தவம், தானம், மானம், ஒளி, புகழ்,
குலம், வண்சரீரம், முற்றும் பதிவான தனம்,
தானியம், கிருகம், மனைவி, மைந்தர், பயில்
நட்பாதிக் கதியாவும் கலந்து சர்வாயுதர் காக்க!

காமர் பவுத்திரர் முன்னான விதியாரும்
சுற்றமெலாம் மயூரேசர் எஞ்ஞான்றும் விரும்பிக் காக்க!
வென்றி,சீவிதம் கபிலர் காக்க!
கரியாதியெலாம் விகடர் காக்க!

என்றிவ்வாறிது தனை முக்காலுமும் ஓதிடின்,
நும்பால் இடையூறென்றும் ஒன்றுறா, முனிவரர்காள்,
அறிமின்கள், யாரொருவர் ஓதினாலும் மன்ற ஆங்கவர்
தேகம் பிணியற வச்சிர தேகமாகி மின்னும்!

– காசிப முனிவர்.

தடைகள் தகர ,எண்ணங்கள் ஈடேற , அனைத்துவித நலமும் பெற விநாயகர் கவசம் பலன் தரும்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: