ஆன்மீகம்

பித்ரு தோஷத்தை போக்கும் விநாயகர்!

பித்ருக்கள் என்பது தந்தை வழியில் மற்றும் தாய் வழியில் மறைந்த நமது முன்னோர்கள் அனைவரும் நமது பித்ருக்கள் ஆவர். தந்தை வழியில் மறைந்தவர்கள் பிதுர் வழி பித்ருக்கள் எனவும், தாய் வழியில் மறைந்தவர்கள் மாதுர் வழி பித்ருக்கள் எனவும் அழைக்கப்படுவர். அவர்கள், மறைந்த பின்பும் அவர்களின் பசியைப் போக்க வேண்டும். இதுவே பிதுர்கடன் எனப்படும். இதையே, நீத்தார் கடன் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் தெளிவாக கூறுகிறார்.

பித்ரு தோஷம் விளக்கம்

நமது பித்ருக்கள் தான், கடவுளின் அருளை நமக்கு வெகு எளிதாக பெற்றுத் தரும் வல்லமை பெற்றவர்கள்.

நமது வேண்டுதல்களை எளிதில் நிறைவேற்றி, நமது நலனில் அக்கறை கொண்ட நமது பித்ருக்களை நாம் வழிபாடு செய்து அவர்களின் பசியினைப் போக்க வேண்டும்.

அவர்கள் பசியை போக்காமல் விட்டுவிட்டால், நமது பித்ருக்கள் பசியால் வாடுவர்.

அவ்வாறு பசியினால் வாடும் பித்ருக்கள் வருத்தத்துடன் பிதுர்லோகம் செல்வர். அவர்களில் சிலர் கோபத்தினால் நமக்கு சாபமும் அளிப்பர்.

இந்த சாபம் தெய்வத்தின் அருளையே தடை செய்யும் வலிமை கொண்டது. கடவுளின் வரங்களையே தடை செய்யும் ஆற்றல் கொண்டவர்கள் நமது பித்ருக்கள்.

நாம் அவர்களின் கோபத்திற்கோ அல்லது சாபத்திற்கோ ஆளாகாமல் இருப்பது நல்லது.

அவர்களது சாபத்தினால் ஏற்படும் தோஷமே பித்ரு தோஷம் ஆகும்.

எதனால் வருகிறது

பித்ரு தோஷம் நாம் நம் முற்பிறவிகளில் செய்த பாவங்களினாலும், நமது முன்னோர்கள் செய்த பாவங்களினாலும் ஏற்படுகிறது.

ஒருவர் முற்பிறவியில் தனது பெற்றோர்களை கவனிக்காமல் இருந்தால் பெற்றோர்கள் இடும் சாபம் மறுபிறவியில் பித்ரு தோஷமாக மாறுகிறது.

முற்பிறவியில் தனது சகோதர, சகோதரிகளுக்கு ஒருவர் துன்பம் செய்திருந்தால், இப்பிறவியில் தனது சகோதர, சகோதரிகளால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.

ஒருவர் முற்பிறவியில் கருச்சிதைவு செய்திருந்தால், இப்பிறவியில் மகப்பேறு இல்லாமல் சந்ததி விருத்தியடையாமல் போகும்நிலை அமைகிறது.

பிதுர் தோஷம் தன்னையும், தன்னைச் சேர்ந்த குடும்பத்தையும், குழந்தைகளையும் பாதிக்கும். இதனால், குறைந்தது மூன்று தலைமுறைகள் பாதிப்படையும்.

ஒருவரின் ஜாதகத்தில் 1, 3, 5, 7, 9, 11 ஆகிய இடங்களில் பாம்பு கிரகங்களான ராகு, கேது இருந்தாலும், சூரிய, சந்திரர்கள், ராகு அல்லது கேது கிரகங்களுடன் சேர்ந்திருந்தாலும் பித்ரு தோஷம் உள்ள ஜாதகமாக கருதப்படும்.

நிவர்த்தி செய்யும் விநாயகர்

விநாயகர் வழிபாடு பித்ரு தோஷத்தையும் போக்கும் வல்லமை பொண்டது.

தங்கள் மூதாதையர் இறந்த நாள் தெரியவில்லை என்றாலும் ஆதி விநாயகர் கோயிலில் எப்போது வேண்டுமானாலும் பித்ரு கடன் செய்யலாம்.

மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள பூந்தோட்டம் என்ற ஊருக்கு அருகில் உள்ள செதிலாபதியில் இருக்கும் திலதர்ப்பணபுரி ஆதி விநாயகர் திருக்கோயிலில் பித்ரு கடன் செய்வது மிகவும் சிறந்தது.

இதையும் படிங்க:  வறட்சி, பஞ்சத்தை போக்கும் புரட்டாசி வளர்பிறை ஏகாதசி!

பரிகாரங்கள்

ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை நாட்களில் திலதர்ப்பணபுரி ஆதி விநாயகர் திருக்கோயிலில் செய்யும் தர்ப்பணம் மற்றும் தானங்கள் பிதுர் தோஷங்களை நீக்கும்.

பித்ரு சாபம் நீங்க, பூர்வ ஜன்ம பாவங்களின் தீய விளைவுகள் தீர ஞாயிற்றுக்கிழமை வரும் அமாவாசை அன்று திலதர்ப்பணபுரி ஆதி விநாயகர் திருக்கோயிலில் தர்ப்பணம் செய்வது சிறப்பு.

திருவாதிரை, புனர்பூசம், பூசம் நட்சத்திரங்களில் வரும் அமாவாசையன்று திலதர்ப்பணபுரி ஆதி விநாயகர் திருக்கோயிலில் செய்யப்படும் பிதுர் தர்ப்பணம் பன்னிரண்டு ஆண்டுகள் பிதுர் திருப்தி ஏற்படுத்தும்.

அவிட்டம், சதயம், பூரட்டாதி நட்சத்திரங்களில் வரும் அமாவாசையன்று திலதர்ப்பணபுரி ஆதி விநாயகர் திருக்கோயிலில் செய்யப்படும் பித்ரு பூஜையானது பித்ருக்களுக்கும், தேவர்களுக்கும் கிடைக்காத புண்ணிய காலத்தைத் தரும்.

அமாவாசை அவிட்ட நட்சத்திரத்தில் வரும் காலங்களில் பித்ருக்களை நினைத்து அன்னதானம் செய்யலாம்.

ராமேஸ்வரம், காளஹஸ்தி, திருபாம்புரம், திருநாகேஸ்வரம், காசி, கயா போன்ற பரிகாரத் தலங்களுக்கும் சென்று பித்ரு தோஷ பரிகாரங்களை முறையாக செய்துவர பித்ரு தோஷத்தில் இருந்து விடுபடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: