ஆன்மீகம்

ரத சப்தமியின் சிறப்புக்கள்!

உலகுக்கு ஒளி தரும் பகலவனைப் பொங்கல் வைத்து வழிபட்டத்தைத் தொடர்ந்து மற்றுமொரு வழிபாடும் தை மாதத்தில் வருகிறது. அதுதான் ரத சப்தமி. சூரியன் தெற்கு நோக்கிய தன் பயணத்தை முடித்துக்கொண்டு ரத சப்தமியன்று வடக்கு நோக்கிப் பயணப்படுகிறார். இதுவே ரத சப்தமியின் சிறப்பு.

ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் சூரியன் உலா வருவதால் திதிகளில் ஏழாவது நாள் இந்த சப்தமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த ரத சப்தமியில் விரதம் இருந்தால் சூரியனின் அருள் கிடைக்கும். அரசு பதவி, அரசால் ஆதாயம், அரசியல் வாதிகள் இழந்த பதவி அடைதல் போன்ற எண்ணற்ற பலன்களைப் பெறலாம்.

ரத சப்தமியில் விரதம் இருக்கும் முறை : ரத சப்தமி நாளன்று, சூரிய உதயத்துக்கு முன் துயிலெழ வேண்டும். ஏழு எருக்க இலைகளை எடுத்துத் தலை மீது வைத்துக் கொண்டு, ஆண்கள் அதன் மீது சிறிது அட்சதையையும் விபூதியையும் வைத்து கிழக்கு திசை நோக்கி நீராட வேண்டும். பெண்கள் அட்சதையும் மஞ்சளும் வைத்து நீராடுவது அவர்களுக்கு நல்லது. இப்படி நீராடுவதன் மூலம் நம் பாவங்கள் அனைத்தும் கரைந்துபோகும் என்பது நம்பிக்கை. பொதுவாகச் சூரிய உதயத்துக்கு முன் ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளில் நீராடுவது உகந்தது. இயலாதவர்கள் வீட்டிலேயே புனித நீராடலாம். எருக்க இலைகளைத் தலை மீது வைத்து நீராடுவதால் உடலில் எதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.

மேற்கண்ட முறையில் நீராடிய பின்னர், அவசியம் சூரிய வழிபாட்டைச் செய்ய வேண்டும். அச்சமயத்தில், ஆதித்ய ஹ்ருதயம் போன்ற ஸ்லோகங்களை சொல்வது விசேஷம். சூரியனுக்கு அர்க்ய மந்திரம் சொல்லி, நீர்விட வேண்டும். தெரியாதவர்கள், வேதம் படித்தவர்களிடம் உபதேசம் பெற்றுச் செய்யலாம். சூரியனுக்கு உகந்த நிவேதனம் சர்க்கரைப் பொங்கல். சர்க்கரைப் பொங்கலை நிவேதனம் செய்து விட்டு பக்தர்களுக்கு அளிப்பது நல்லது.

சூரியனுக்கு….’சூரிய நாராயணர்’ என்ற ஒரு சிறப்புப் பெயரும் உண்டு. அதாவது சூரியன் திருமாலின் இன்னொரு அவதாரம். அதனால் தான், ரத சப்தமியன்று கோயில்களில் பெருமாள் சூரிய பிரபையில் எழுந்தருள்வார்.

தை அமாவாசை நாளை அடுத்த ஏழாவது நாளில் ரத சப்தமி கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் தான் சூரியன் அவதரித்தார் என்றும் சொல்லப்படுகிறது. திருப்பதி திருமலையில் ரதசப்தமி அன்று ஒரு நாள் பிரம்மோற்சவம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

இந்த ரத சப்தமி நாளில் இருந்து சூரிய பகவான் தனது ஒளியையும், வெப்பத்தையும் சிறுகச் சிறுக கூட்டுவார். இதனாலும் கூட சூரிய பகவானுக்கு ரத சப்தமியில் வழிபாடு நடத்தப்படுகிறது. குறிப்பாக, தஞ்சை மாவட்டம் சூரியனார் கோயில், திருமலை ஸ்ரீ நிவாசப் பெருமாள் உள்பட பல ஆலயங்களில் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. திருமலையின் ஏழு மலைகளை ஏழு குதிரைகளாகப் பாவித்து, ரத சப்தமி விழா கொண்டாடப்படுகிறது. ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோயிலிலும் ரத சப்தமி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அது மட்டும் அல்லாமல், ரத சப்தமி நாளில் செய்யப்படும் தர்மத்துக்குப் பல மடங்கு புண்ணியம் உண்டு. ரத சப்தமி நாளில் தொழில் தொடங்குவது என்பது மிகவும் விசேஷம்.

இதையும் படிங்க:  திருமணப் பொருத்தம் என்றால் என்ன?

இவ்வளவு விசேஷம் வாய்ந்த ரத சப்தமியில் உலகின் இருள் நீக்கும் பகலவனை வணங்கி நாமும் கூட, வாழ்வில் ஒளி பெறுவோம். அத்துடன் ரத சப்தமி விரதம் இருப்பதால் கீழ்கண்ட நன்மைகளைப் பெறலாம்.

1. ஆயுள் நீடிக்கும்.

2. ஆரோக்கியம் மேம்படும்.

3. ரத சப்தமி விரதம் பெண்களின் மாங்கல்ய பலத்தை நீட்டிக்கச் செய்யும்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: