இந்தியா

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும்.. மத்திய அரசுக்கு, விவசாயிகள் எச்சரிக்கை..

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை, டெல்லியில் தங்களது போராட்டம் தொடருமென, விவசாயிகள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.

மத்திய பாரதிய ஜனதா அரசின் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, டெல்லியில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்‍கணக்‍கான விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் 81-வது நாளாக நீடிக்‍கிறது. அடுத்தகட்ட போராட்டம் குறித்து, விவசாயிகள் பிரம்மாண்ட ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ஹரியானா மாநிலம், Bahadurgarh பகுதியில், விவசாயிகள் நேற்று ஆலோசனை நடத்தினர். அப்போது பேசிய பாரதிய கிசான் யூனியனின் தலைவர் திரு.ராகேஷ் திகெய்த், புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடருமென உறுதியாகத் தெரிவித்தார்.

மத்திய அரசு 10 நாட்களில் தங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தாலும், அடுத்த ஆண்டு வரை காலம் தாழ்த்தினாலும், சிங்கு எல்லையிலேயே தங்களது போராட்டம் தொடரும் எனவும், திரு.ராகேஷ் திகெய்த் தெரிவித்துள்ளார். மேலும் குஜராத் மாநிலத்தில் இருந்து போராட்டத்தில் கலந்துகொள்ள விரும்பும் விவசாயிகள் மத்திய அரசால் கைது செய்யப்படுவதாக குற்றம் சாட்டிய அவர், நாடு முழுவதிலும் உள்ள விவசாயிகள் குஜராத்திற்கு அணி வகுத்துச் சென்று, கைதான விவசாயிகளை விடுவிக்க உள்ளதாகவும், இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இதனிடையே, வரும் ஞாயிற்றுக்‍கிழமை 3 பிரம்மாண்ட ஆலோசனைக்‍ கூட்டங்களை நடத்த விவசாய சங்கங்கள் திட்டமிட்டுள்ளன.

Back to top button
error: Content is protected !!