உலகம்

ஆகஸ்ட் 1 வரை அவசர நிலை பிரகடனம் நீடிப்பு – மலேசிய அரசு அறிவிப்பு

தற்போது உலகம் முழுவதும் வேகமெடுத்திருக்கும் புதிய வகை கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மலேசியாவில் ஆகஸ்ட் 1ம் தேதி வரை அவசரநிலை பிரகடனத்தை அறிவித்திருக்கிறது மலேசியா அரசு.

அவசரநிலை பிரகடனம்

கடந்த மாதம் இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட உருமாறிய புதியவகை கொரோனா இந்தியா, ஜெர்மனி, லெபனான், மலேசியா உள்ளிட்ட 9 நாடுகளை தாக்கியுள்ளது. அதி தீவிரமாக பரவும் இந்த உருமாறிய புதியவகை கொரோனா வைரஸ் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று மருத்துவ நிபுணர்களால் எச்சரிக்கப்பட்டது. இதை தொடர்ந்து இங்கிலாந்தில் மீண்டுமாக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. லெபனோனிலும் பிப்ரவரி 1 வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியாவிலும் பரவி வரும் இவ்வகை கொரோனாவால் இதுவரை 98 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது உருமாறிய கொரோனா வைரஸிலிருந்து மக்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக ஆகஸ்ட் 1 ம் தேதி வரை அவசர நிலை பிரகடனத்தை அறிவித்துள்ளது மலேசிய அரசு. இது தொடர்பாக மலேசிய பிரதமர் முகைதீன் யாசின் தலைமையில் அமைச்சரவை பரிந்துரை கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட பரிந்துரையை ஏற்று மலேசிய மன்னர் அப்துல்லா ஹாஜி அகமத் ஷா ஆகஸ்ட் 1ம் தேதி வரை அவசரநிலை பிரகடனத்தை அறிவித்திருக்கிறார்.

இதனால் நாட்டின் பொருளாதாரத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த கால கட்டங்களில் பொது தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் எதுவும் நடத்தப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Back to top button
error: Content is protected !!