தோசை

இன்ஸ்டன் பன் தோசை.. இப்படி செய்து பாருங்க..!

தோசை தயாரிக்க முதல் நாளே மாவினை அரைத்து அதனை புளிக்க வைக்க வேண்டும். ஆனால் சிலருக்கு உடனடியாக தோசை சாப்பிட வேண்டும் என தோன்றும் அப்படியானவர்கள் புளிக்க வைத்த மாவு இல்லையென கவலைப்பட வேண்டாம். உங்களுக்காக பன் தோசை செய்வது பற்றி இதோ செய்முறை.

தேவையான பொருட்கள் :

பொரி- 2 கப்

ரவை- 1 கப்

தயிர் – 1 கப்

உப்பு – 1 டேபிள் ஸ்பூன்

பேக்கிங் சோடா – தேவையான அளவு.

சட்னிக்கு

பச்சை மிளகாய் – 3

வறுத்த வேர்க்கடலை – 2 டேபிள் ஸ்பூன்

பூண்டு, கிராம்பு – 5 துண்டுகள்

துருவிய தேங்காய்த் தூள் – 5 கப்

உப்பு தேவையான அளவு

எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

கடுகு – 1/2 டேபிள் ஸ்பூன்

உளுத்தம் பருப்பு – 1/2 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை – தேவையான அளவு.

செய்முறை:

முதலில் அரிசி பொரியை பொடியாக மிக்ஸியில் அரைத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் ரவையை கலந்துக் கொள்ளுங்கள். இப்போது இதனுடன் தயிர் மற்றும் சிறிதளவு பேக்கிங் சோடாவை சேர்த்து, மாவிற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து அதனை மூடி 5 முதல் 10 நிமிடங்கள் ஊற வைத்துவிடுங்கள்.

அது ஊறிக் கொண்டிருக்கும் சமயத்தில் சட்னியை தயார் செய்து விடலாம். நறுக்கிய பச்சை மிளகாய், வறுத்த வேர்க்கடலை, பூண்டு கிராம்பு, தேங்காய் துருவல் மற்றும் பச்சை கொத்தமல்லி இலைகள் மற்றும் தயிர் ஆகியவற்றை சேர்த்து அரைத்துக்கொள்ளவும் .பேஸ்ட் பதத்திற்கு வந்ததும் ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி உளுந்து, கடுகு, எல்லாவற்றையும் தாளித்து சட்னியுடன் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பின்னர் அதே வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு , கறிவேப்பிலை, உளுந்து, பச்சை மிளகாயை சேர்ந்த்து அதனை ஊறவைத்த மாவுடன் சேர்த்துக் கொள்ளுங்கள்.

தோசை புதுசு

உங்களது பன் தோசை மாவு தயார். இப்போது அடுப்பில் தோசை கல்லை வைத்து அதில் சிறிதளவு நெய் அல்லது எண்ணெய் சேர்த்து பன் தோசை மாவினை ஊற்றிக்கொள்ளுங்கள். மெல்லியதாக இல்லாமல் கனமாக ஊற்றினால் தோசை சுவை இன்னும் அதிகரிக்கும். அதனை இருபுறமும் வேக வைத்து எடுத்து பரிமாறினால் சுவையான இன்ஸ்டன் பன் தோசை தயார்.