இரவில் சப்பாத்திக்கு எப்போதும் ஒரே மாதிரியான மசாலாவை செய்யாமல், அவ்வப்போது வெரைட்டியாக செய்து சாப்பிடுங்கள். குறிப்பாக காலிஃப்ளவர் மசாலா சப்பாத்திக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். மேலும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடும். அதுமட்டுமின்றி, இது நிறைய சத்துக்கள் நிறைந்த காய்கறியும் கூட. உங்களுக்கு மிகவும் எளிமையாக காலிஃப்ளவர் மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள்.
தேவையான பொருட்கள்:
காலிஃப்ளவர் – 1 (துண்டுகளாக்கப்பட்டது)
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 2 (அரைத்தது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – 1/4 டீஸ்பூன்
மல்லித் தூள் – 1/2 டீஸ்பூன்
மில்க் + க்ரீம் – 1/4 கப்
கொத்தமல்லி – சிறிது
உப்பு – தேவையான அளவு
தாளிப்பதற்கு…
எண்ணெய் – 1 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
பட்டை – 1/4
இன்ச் கிராம்பு – 2
ஏலக்காய் – 1
பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)
முதலில் காலிஃப்ளவரை உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி ஓரளவு வேக வைத்து, நீரை வடித்து தனியாக வைத்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, இஞ்சி பூண்டு பேஸ்ட், வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பிறகு அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து, அத்துடன் மிளகாய் தூள், கரம் மசாலா, மல்லித் தூள் சேர்த்து பச்சை வாசனை போக நன்கு 3-5 நிமிடம் வதக்கி, 1/4 கப் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
பின் அதில் பால் மற்றும் க்ரீம் சேர்த்து சிறிது நேரம் குறைவான தீயில் கொதிக்க விட்டு, பின் அதில் காலிஃப்ளவர் சேர்த்து நன்கு வேக வைத்து, கொத்தமல்லித் தூவி இறக்கினால், காலிஃப்ளவர் மசாலா தயார்!!