ஒரு ஊரில் ஒரு தந்தை , மகன் இருந்தார்கள். அவருடைய மகன் அதிகமாய் கோபப்படுபவனாகவும், பிறர் மனதை புண்படுத்துபவனாகவும் இருந்தான். இவன் கோபப்படுவதை பலமுறை அவனுடைய தந்தை கண்டித்துள்ளார்.
ஆனால் அவனுடைய கோபம் மற்றொருவரை எப்படி காயப்படுத்தும் என்பதை அவன் புரிந்து கொள்ளாமல் செய்த தவறை திரும்ப திரும்ப செய்து கொண்டிருந்தான்.
- Advertisement -
அவனுடைய கோபத்தினால் பிறருக்கு ஏற்படும் விளைவுகளை அவனுக்கு உணர்த்த வேண்டும் என்று நினைத்த அந்த தந்தை தன்னுடைய மகனை அழைத்து. மகனே இங்கே வா என்று கூறினார் .
அதன்பிறகு அவன் கையில் 30 ஆணிகளை கொடுத்து உனக்கு எப்பொழுதெல்லாம் கடுமையாக கோபம் வருகிறதோ அப்பொழுதெல்லாம் ஒவ்வொரு ஆணியாக எடுத்து நம் வீட்டின் பின்புறமுள்ள சுவற்றில் அடித்து விடு என்று கூறினார்.
- Advertisement -
அவனும் எப்பொழுதெல்லாம் கோபம் வருகிறதோ அப்போதெல்லாம் ஒவ்வொரு ஆணியாக எடுத்து சுவற்றில் அடிக்க ஆரம்பித்தான். 20 நாட்களில் முப்பது ஆணிகளை அடித்து முடித்துவிட்டு தன்னுடைய தந்தையிடம் சென்றான்.
தந்தையே நீங்கள் கொடுத்த 30 ஆணிகளும் திர்ந்தாயிற்று. எனக்கு ஆணி அடித்து அடித்து இறுதியில், ஐயோ ! கோபப்பட்டால் அப்பா ஆணியை கொடுத்து அடிக்க சொல்லுவாரு என்று சிந்தித்து கோபப்படுவதை நான் குறைத்துக் கொண்டேன் என்று தன்னுடைய தந்தையிடம் கூறினான்.
அதைக்கேட்ட அவனுடைய தந்தை சரி மகனே நீ எப்பொழுது எல்லாம் கோபப்படாமல் நிதானத்தை கடைப்பிடிக்கிறாயோ அப்பொழுதெல்லாம் நீ அடித்த ஆணியை ஒவ்வொன்றாக சுவற்றில் இருந்து பிடுங்கிவிடு என்று கூறினார்.
அவனும் 30 நாட்களில் 30 ஆணி சுவற்றில் இருந்து பிடுங்கி எடுத்து விட்டு தன்னுடைய தந்தையிடம் கொடுக்கிறான். அதைப் பார்த்த அவனுடைய தந்தை தன்னுடைய மகனை அழைத்துக்கொண்டு அந்த சுவரை காட்டினார்.
அந்த சுவர் ஆணி அடித்த காரணத்தினால் சிறு சிறு பள்ளங்களாக அழகற்று போய் இருந்தது . அப்பொழுது அந்த தந்தை தன்னுடைய மகனைப் பார்த்து இவ்வாறாக கூறினர்.
மகனே! நீ கோபப்படும் போது சுவற்றில் ஆணிகளை அடித்தாய் அதுவே கோபத்தை கட்டுப்படுத்தும் போது அந்த ஆணிகளை சுவற்றில் இருந்து பிடுங்கி எடுத்தாய். ஆனால் அந்த சுவற்றில் ஆணி அடித்த தடம் அப்படியே தான் உள்ளதல்லவா?
அதுபோலத் தான் ஒரு மனிதரை நீ புண்படும்படி பேசினால் அவர்களுக்கு வருத்தம் ஏற்படும் . அதுவே அவர்களிடம் மன்னிப்பு கேட்கும் போது அவர்கள் உன்னை மன்னித்து விடுவார்கள் என்றுகூட வைத்துக்கொள்வோம்.
ஆனால் நீ கோபப்பட்டதை அவர்கள் மன்னித்தாலும் அந்த நினைவுகள் இந்த ஆணி ஏற்படுத்திய காயம் போல் அவர்கள் மனதில் என்றென்றும் ஒரு வடுவாக இருக்கும் .
ஆகையால் கோபப்பட்டப் பிறகு மன்னிப்பு கேட்பதற்குப் பதிலாக ஒரு நிமிடம் நிதானத்தை கடைபிடித்து கோபத்தை அடக்க கற்றுக்கொள் . அது உன்னையும் , உன்னை சார்ந்து இருப்பவர்களையும் மேன்மைப்படுத்தும் என்று கூறினார்.
அதைக் கேட்ட அவருடைய மகன் தன்னுடைய தவறை உணர்ந்து வருந்தினான். அப்படித்தான் நம்மில் பலர் ஏதோ ஒரு சில காரணங்களால் நம்முடைய வீட்டாரிடமும், குழந்தைகளிடமும் அல்லது நெருங்கியவர்களிடமும் ஏதோ சில காரணங்களுக்காக கோபப்படுகிறோம்.
அவர்கள் நம்மை மன்னித்தாலும் அவர்களால் அதை அவ்வளவு சீக்கிரமாக மறக்க முடியாது. அதனால் தான் உலகத்திலே பயங்கரமான ஆயுதம் நம்முடைய நாக்கு என்று சொல்கிறார்கள் போலும் . ஆகையால் ” யாகாவாராயினும் நாகாக்க ” நன்றி வணக்கம்..!