3 வருட சாதனையை முறியடித்த எலோன் மாஸ்க்

2020ஆம் ஆண்டில் இந்தியா மட்டுமின்றி உலகப் பொருளாதாரமே ஆட்டம் கண்ட நிலையில், பல்வேறு நிறுவனங்களும் பெரும் பாதிப்பிற்குள்ளாகின. உலகில் வேலைவாய்ப்பின்மை தாண்டவமாடும் நிலை ஏற்பட்டுவிடுமோ என்ற எண்ணமும் எழத் தொடங்கின.
இதற்கிடையில், கரோனா காலத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு, பல்வேறு நிறுவனங்களும் குறைந்த பணியாளர்களுடன் தங்கள் இலக்கை எட்டும் முயற்சியில் இறங்கின. மற்ற நிறுவனங்களைப் போன்றே ஊரடங்கு காலத்தில் தங்களது நிறுவனம் தப்பிப் பிழைக்க 10 விழுக்காடு மட்டுமே வாய்ப்புள்ளது என எண்ணியதாக கூறியுள்ளார் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அலுவலர் எலோன் மாஸ்க்.
இவர் விண்வெளிப் பயணம், எலெக்ட்ரிக் கார்கள் என பல்வேறு சோதனை முயற்சிகளை ஈடுபடுத்தி வந்தார். இது தொடர்பாக நேர்காணல் ஒன்றில் பதிலளித்த அவர், விண்வெளிப் பயணம் நாகரிகமாக மனிதகுலத்தின் பரிணாமத்தை விரைவுபடுத்தும் எனக் கூறினார். அது மட்டுமின்றி, அதற்கான பணிகளிலும் முனைப்புடன் செயல்பட்டார்.
அதன் விளைவாக, எலோன் மாஸ்கின் நிகர மதிப்பு நடப்பாண்டில் 150 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. மேலும், டெஸ்லாவின் பங்கு விலை கடந்த ஆண்டில் மட்டும் 743 விழுக்காடு அதிகரித்துள்ளது.
உலக பணக்காரர்கள் வரிசையில் இரண்டாவது இடத்திலிருந்த எலோன் மாஸ்கின் சொத்து மதிப்பு, நியூயார்க்கில் நேற்று (ஜனவரி 8) 188.5 பில்லியன் டாலராக உயர்ந்தது. இந்த மதிப்பு அமேசான் நிறுவனர் ஜெப் பிசோசாவை விட, 1.5 பில்லியன் டாலர் அதிகமாக இருந்ததைத் தொடர்ந்து எலோன் மாஸ்க் உலகப் பணக்காரர் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
இவர், 2017ஆம் ஆண்டிலிருந்து உலகின் பணக்காரர் பட்டியலில் முதலிடம் வகித்து வந்த அமேசன் நிறுவனர் ஜெஃப் பிசோசாவை பின்னுக்குத் தள்ளி சாதனை படைத்துள்ளார் என பலரும் புகழாரம் சூட்டியுள்ளனர்.
இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள எலோன் மாஸ்க் இந்த முக்கிய மைல்கல்லை எட்டியது டெஸ்லா அணிக்கு மிகவும் பெருமை வாய்ந்த தருணம் எனக் குறிப்பிட்டுள்ளார்.