ஆன்மீகம்

அனைத்து செயல்களிலும் வெற்றியை கொடுக்கும் ஏகாதசி!

அமாவாசையை அடுத்துவரும் வளர்பிறை ஏகாதசியை சுக்கில பட்ச ஏகாதசி என்றும், பௌர்ணமிக்கு அடுத்துவரும் தேய்பிறை ஏகாதசியை கிருஷ்ண பட்ச ஏகாதசி என்றும் அழைக்கின்றனர். வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரண்டு காலங்களிலும் ஏற்படும் ஏகாதசி திதி தினத்தில் விஷ்ணுவை வழிபடத் துன்பங்கள் தீரும். ஆவணி வளர்பிறை திதியில் வருகின்ற ஏகாதசியை புத்ரஜா ஏகாதசி என்று சொல்கிறோம். இந்த ஏகாதசியில் தவறாமல் விரதம் மேற்கொள்பவர்களுக்கு நிறைந்த சந்தான பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம். மேலும், கடினமான சூழல் மற்றும் போராட்டமான வாழ்க்கையில் இருப்பவர்கள் இந்த ஆவணி வளர்பிறை ஏகாதசி விரதத்தை கட்டாயம் கடைபிடித்தால் வாழ்வில் வெற்றியை சந்திப்பார்கள்.

ஏகாதசி வரலாறு

முரன் என்னும் அசுரன் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், மானிடர்களுக்கும் மிகுந்த தொல்லை அளித்து வந்தான். இதனால் அவனை அழித்து தங்களை காக்குமாறு சிவபெருமானிடம் முறையிட்டனர். அவர்களை, மகாவிஷ்ணுவிடம் சரணடையும்படி கூறினார் சிவபெருமான். அதன்படி அனைவரும் மகாவிஷ்ணுவை சரணடைந்தனர். அவர்களை காக்க எண்ணிய மகாவிஷ்ணு, அந்த அசுரனோடு போர் புரியத் தொடங்கினார். போர் 1000 ஆண்டுகள் நீடித்தது. அதனால் களைப்படைந்த மகாவிஷ்ணு பத்ரிகாஸ்ரமத்தில் உள்ள ஒரு குகையில் படுத்து ஓய்வெடுத்தார்.

அந்த நேரத்தை தனக்கு சாதகமாக்கி கொண்டு, ‘முரன்’ பகவானை கொல்லத் துணிந்த போது, அவருடைய திவ்ய சரீரத்தில் இருந்து அவருடைய சக்தி ஒரு பெண் வடிவில் வெளிப்பட்டது. இவளை அசுரன் நெருங்கிய வேளையில் அவளிடம் இருந்து வெளிப்பட்ட ஓங்காரமே, அசுரனை எரித்து சாம்பலாக்கியது.

விழித்தெழுந்து நடந்ததை உணர்ந்த நாராயணன், அந்த சக்திக்கு “ஏகாதசி” எனப் பெயரிட்டு உன்னை விரதம் இருந்து போற்றுவோருக்கு நான் சகல நன்மைகளையும் தருவேன் என வரமளித்து தன்னுள் மீண்டும் அந்த சக்தியை ஏற்றுக்கொண்டார். எனவே ஏகாதசி எனும் சக்தி விழிப்புடன் இருந்து நாராயணனை பாதுகாத்து அருளும் வரமும் பெற்றதை போல , ஏகாதசி நாளில் நாமும் கண்விழித்து பக்தியையுடன் விரதம் கடைபிடித்தால் அவரின் அருள் பரிபூரணமாக கிடைக்க பெறலாம்.

விரத முறை

புத்ரஜா ஏகாதசி நாளில், முடிந்தவர்கள் முழு விரதம் மேற்கொள்வது பயன்தரும்.

காலை முதல் மாலை வரை எதுவும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும் அல்லது துளசி இலைகள் இடப்பட்ட தீர்த்த நீரை அருந்தி விரதம் இருக்கலாம்.

பெண்கள், வயதானவர்கள் மற்றும் உணவருந்தாமல் இருக்க முடியாதவர்கள் பால், பழம் அல்லது குறைந்த அளவிலான உணவு எடுத்துக்கொள்ளலாம்.

நாள் முழுவதும் “ஸ்ரீ ஹரி விஷ்ணுவின்” நாமத்தை நேரம் கிடைக்கும் போதெல்லாம் படிக்க வேண்டும்.

பொதுவாக ஏகாதசி விரதம் இருப்பவர்கள், மறு நாள் துவாதசி திதி நாளில் இறைவனை வணங்கி விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.

வழிபாடு

அன்றைய நாள் முழுவதும் பெருமாளுக்குரிய மந்திரங்கள், விஷ்ணு புராணம் போன்றவற்றை பாராயணம் செய்வது நல்லது.

மாலையிலும் பெருமாள் கோயிலுக்கு சென்று வழிபட்ட பின்பு வீட்டிற்கு திரும்பி சுவாமிக்கு பால், பழம் வைத்து வணங்கலாம்.

பலன்கள்

புத்ரஜா ஏகாதசி விரதத்தை மேற்கொண்டால் அழகான குழந்தை பிறக்கும். குழந்தை பெறுவதற்கான தடை நீங்கும்.

இவ்விரதத்தை, கடைபிடிப்பவர் அனைவருக்கும் அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும்.

செல்வ வளம் மிக்க வாழ்க்கை, நோய் நொடியின்றி நீண்ட ஆயுள் கிடைக்கும்.

ஏகாதசி விரதம் இருப்பவர்களுக்கு மரண பயம் இன்றி, மறுபிறவி இல்லா முக்தி நிலையும் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: