
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. ஃபாஸ்டேக் இல்லாதவர்களிடம் அபராதமாக இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதால் வாகன ஓட்டிகள், அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில், வாகன நெரிசலைக் குறைக்கும் நடவடிக்கையாக, ஃபாஸ்டேக் முறையில் சுங்கக் கட்டணம் செலுத்துவதை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது. இதற்காக வங்கிகள், சுங்கச்சாவடிகள், தனியார் சேவை மையங்கள் உள்ளிட்ட இடங்களில், ஆதார் அட்டை, வாகனங்களின் ஆர்.சி. நகலைக் கொடுத்து ஃபாஸ்டேக் மின்னணு அட்டைகளை பெற்றுக் கொள்ளலாம்.
ஃபாஸ்டேக் முறையால், சுங்கச்சாவடிகளில், 20 முதல் 25 மீட்டருக்குள் வாகனங்கள் வரும்போது ரேடியோ அதிர்வெண் உதவியுடன், தானியங்கி தடுப்புகள் விலகும் என்பதால், போக்குவரத்து நெரிசல் குறைவதோடு, காலவிரயமும் தவிர்க்கப்படும். கடந்த ஓராண்டாக சோதனை முறையில் நாடு முழுவதும் அமலில் இருந்த ஃபாஸ்டேக் முறைக்கு அவ்வப்போது கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இன்று நள்ளிரவு முதல் இது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இனி காலஅவகாசம் வழங்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டிருப்பதால் ஃபாஸ்டேக் இல்லாத வாகன ஓட்டிகளிடம் இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனால், பல்வேறு சுங்கச்சாவடிகளில், வாகன ஓட்டிகளுக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் வாக்குவாதங்கள் நடந்து வருகின்றன.