ஆரோக்கியம்தமிழ்நாடு

கோழிக்கறி, முட்டை உண்பதால் பறவைக் காய்ச்சல் பரவுமா? மருத்துவர்கள் விளக்கம்!

கொரோனா பரவல் தற்போது குறைந்து வரும் நிலையில் கேரளாவில் தீவிரமடைந்து உள்ள பறவைக் காய்ச்சல் பொதுமக்களிடையே பீதியை கிளப்பி உள்ளது. குறிப்பாக அசைவ உணவு பிரியர்கள் இதனால் ஆடிப்போய் உள்ளனர். இந்நிலையில் கோழிக்கறி, முட்டை உண்பதால் பறவைக் காய்ச்சல் பரவுமா? என்பதற்கு மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

பறவைக் காய்ச்சல்:

‘ஏவியன் இன்ஃப்ளுயன்ஸா’ எனும் வைரஸ் தாக்கத்தால் பறவைக் காய்ச்சல் ஏற்படுகிறது. நாடு முழுவதும் தற்போது வரை 5 மாநிலங்களில் இது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா போன்றவையும் அடக்கம். இதனால் தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் பரவாமல் இருக்க மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. தற்போது வரை மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சல் பரவல் கண்டறியப்படவில்லை.

இது குறித்து மருத்துவர்கள் கூறும் போது, கோழி, வாத்து உள்ளிட்ட பறவை இனங்களின் இறைச்சிகள், முட்டைகளை சமைப்பவர்கள் அது முடிந்த பின்னர் கையை நன்றாக கிருமிநாசினி தேய்த்து கழுவ வேண்டும். மேலும் இறைச்சியை நன்றாக வேக வைத்து உண்ண வேண்டும். முழுவதுமாக வேக வைப்பதால் அதில் இருக்கும் கிருமிகள் அழிக்கப்பட்டு விடும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

சில சமூக விரோதிகள், கோழி, வாத்து இறைச்சிகள் மற்றும் முட்டைகள் மூலம் பறவைக் காய்ச்சல் பரவும் என வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது முற்றிலும் தவறு. முட்டைகளை பச்சையாக குடிப்பது, இறைச்சிகளை அரைவேக்காட்டில் உண்பது போன்றவற்றை தவிர்த்தாலே பறவைக் காய்ச்சலில் இருந்து காத்துக் கொள்ளலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

Back to top button
error: Content is protected !!