ஆரோக்கியம்

பொடுகு தொல்லை நீங்க வேண்டுமா?

தலையில் அரிப்பு மற்றும் முடி உதிர்வது போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கு பெரும்பாலும் பொடுகு இருப்பதே காரணமாகும். தோல் வறண்டு போவதால் அழற்சி ஏற்பட்டு வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில் பொடுகு உருவாகி உதிரும்.

இது பெரும்பாலும், தலை, முகம், காது போன்ற பகுதிகளில் காணப்படும். தலையை மட்டும் பாதிக்கும் பொடுகு, முகங்களையும் சேர்த்து பாதிக்கிற அபாயம் இருக்கிறது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

அதாவது மிக அதிக அளவில் பொடுகு தொல்லை ஏற்படும் போது அவை புருவங்களுக்கு அருகில் அல்லது மூக்கு பகுதியை சுற்றி வறண்ட சருமமாக மாற வாய்ப்புள்ளது. இது முகப்பொடுகு என்றழைக்கப்படுகிறது.

பொடுகு வருவதற்கான சரியான காரணங்கள் குறித்து இன்னும் மருத்துவ ரீதியாக கண்டுபிடிக்கப் படாவிட்டாலும், அவற்றை எவ்வாறு அகற்றுவது என்றும், மீண்டும் வராமல் தடுப்பதற்கான வழிகள் குறித்தும் பார்க்கலாம்.

பொடுகு எப்படி வருகிறது

வறட்சியான சருமம், நோய் எதிர்ப்புத் தன்மை குறைவு, அதிக மனஉளைச்சல் போன்றவைகளால் வருகிறது.

தலைக்கு குளித்த பின்னர் சரியாக தலையை துவட்டாததால் தண்ணீர், சோப்பு தண்ணீர் போன்றவைகள் தலையில் தங்கி பொடுகு உற்பத்தியாகிறது.

எப்பொழுதும் எண்ணெய் பசை மிகுந்த தலையுடன் இருப்பது, அழுக்கு தலையுடன் இருப்பது பொடுகை ஏற்படுத்துகிறது.

தலையில் வியர்வை உற்பத்தியாகி, அந்த வியர்வை தண்ணீர் தலையில் தங்கும் போதும் பொடுகு வருகிறது.

எவ்வாறு தவிர்க்கலாம்?

கொழுப்பு சத்துள்ள நெய், பால், வெண்ணெய் முதலிய உணவுகளை அடிக்கடி சேர்த்து கொள்ளும்போது பொடுகு வருவதை தவிர்க்கலாம்.

ஒருவர் பயன்படுத்திய சீப்பு தலையாணை, துண்டு போன்றவற்றை அடுத்தவர் பயன்படுத்தக்கூடாது.

தலையை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்கும்போது பொடுகு தொல்லையில் இருந்து தப்பிக்கலாம்.

எப்படி போக்குவது

மிளகு தூளுடன் பால் சேர்த்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் ஊறிய பின் குளித்தால், பொடுகு தொல்லை நீங்கும்.

வெந்தயத்தை தலைக்கு தேய்த்து குளித்தால், உடல் உஷ்ணம் குறைவதுடன் பொடுகு தொல்லை நீங்கும்.

தலையில் சிறிதளவு தயிர் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்பு அல்லது சீயக்காய் தேய்த்து குளித்தால், பொடுகு நீங்கும்.

வேப்பிலை கொழுந்து, துளசி ஆகியவற்றை அரைத்துத் தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

வசம்பை நன்கு பவுடராக்கி, தேங்காய் எண்ணெயில் ஊற வைத்து, அந்த எண்ணெயை தலையில் தேய்த்து வந்தால் பொடுகு மறைந்து போகும்.

எலுமிச்சம் பழச்சாற்றுடன், தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்து வந்தாலோ அல்லது எலுமிச்சம் பழச்சாறுடன், தயிர் மற்றும் பச்சை பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்பு போட்டு குளித்தாலும் பொடுகு நீங்கும்.

இதையும் படிங்க:  ஆரோக்கியமான நுரையீரலுக்கு நீராவி?

தலைக்கு குளிக்கும் போது, கடைசியாக குளிக்கும் தண்ணீரில், வினிகர் கலந்து குளித்தால், பொடுகு நீங்கும்.

நெல்லிக்காய் தூள், வெந்தயப் பொடி, தயிர் மற்றும் கடலைமாவு கலந்து தலையில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வர பொடுகு நீங்கும்.

வாரம் ஒரு முறை, மருதாணி இலையை அரைத்து, சிறிதளவு தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்தால், பொடுகு தொல்லை நீங்கும்.

தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி, தலையில் தேய்த்து வந்தால், பொடுகு பிரச்சனை நீங்கும்.

தேங்காய் பால் எடுத்த பின் தலையில் நன்றாகத் தேய்த்து, சிறிது நேரம் கழித்து மிதமான நீரில் தலையை அலசினால் பொடுகு, மறைந்து விடும்.

முதல்நாள் சாதம் வடித்த தண்ணீரை எடுத்து வைத்து, மறுநாள் அதை தலையில் தேய்த்து குளித்தால், பொடுகு நீங்கும்.

தயிர், முட்டை மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்துக் குளிக்க பொடுகு மறையும்.

துளசி, கறிவேப்பிலையை அரைத்து எலுமிச்சம்பழச்சாற்றுடன் கலந்து தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு பிரச்சனை நீங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: