ஆன்மீகம்

ஏழரை சனி செய்வது என்ன தெரியுமா?

பொதுவாகவே குரு, சனி பகவான்களின் பெயர்ச்சிகள் அனைவரின் மனதிலும் ஓர் ஆச்சரியமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடுகிறது. அதிலும் குறிப்பாக சனி பகவானின் பெயர்ச்சியால் நம் வாழ்க்கையில் என்ன நடக்குமோ என்கிற பயம் கலந்த எதிர்பார்ப்பு உண்டாகிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.

ஏழரை சனி சிலரை படுத்தி எடுக்கும் சிலருக்கு பதவியை கொடுக்கும் யாராக இருந்தாலும் தலைகணம் பிடித்து ஆடினால் ஏழரை சனி காலத்தில் தலையில் தட்டி அமர வைத்து விடுவார். ஏழரை சனி காலம் என்பது மனிதர்களுக்கு பல அனுபவங்களை கற்றுக்கொடுக்கும் காலம். சனிபகவான் ஏழரை ஆண்டுகள் ஒருவருக்கு பலவித கஷ்டங்களை கொடுத்து வாழ்க்கை பாடத்தை புரிய வைப்பார்.

ஏழரை சனி காலத்தில் இருபது வயது வாலிபனை, வயதிற்கேற்றார் போல காதல் தோல்வியிலும், முப்பது வயதுகளில் இருப்பவனை தொழில் அமைப்புகளிலும், நாற்பதில் இருப்பவனை தொழில், குடும்ப அமைப்புகளிலும் கடுமையான சிக்கல்களை சனி தருவார். சிலருக்கு நெருங்கிய உறவினர் இழப்பின் மூலமாக மனப்பதட்டத்தைத் தருவார்.

ஏழரை சனி என்பது ஒருவரின் ராசிக்கு விரைய சனியாகவும், ராசியில் அமர்ந்து ஜென்மசனியாகவும், ராசிக்கு இரண்டாம் வீட்டில் அமர்ந்து பாத சனியாகவும் சஞ்சரிப்பார். ஒரு மனிதனின் வாழ்நாளில் முப்பது வருடங்களுக்கு ஒருமுறை நிகழும் இந்நிகழ்வில் முதல் சுற்று, இரண்டாம் சுற்று, மூன்றாம் சுற்று எனப்படும் ஏழரை சனி, பொங்குசனி,மங்கு சனி என மூன்று சுற்றுக்கள் இருக்கும்.

சனிபகவான் நீதிமான். இவர் ஆட்சி செய்யும் வீடு மகரம், கும்பம், இவர் உச்சம் பெறும் வீடு துலாம், சனிபகவான் நீசம் பெறும் வீடு மேஷம். நியாயத்தராசு இருக்கும் துலாம் ராசியில் உச்சம் பெறுவதால் நீதி, நேர்மையாக இருப்பவர்களை இவருக்கு ரொம்ப பிடிக்கும். அந்த ஆண்டவனாகவே இருந்தாலும் சனியின் பிடியில் இருந்து தப்ப முடியாது. சனிபகவான் சில காலம் ஏழரை சனியாகவும், அஷ்டமசனியாகவும், அர்த்தாஷ்டம சனியாகவும், கண்டச்சனியாகவும் பிடித்து சில படிப்பினைகளை கொடுப்பார். இதன் மூலம் வாழ்க்கைப் பாடங்களை உணர வைப்பார்.

உண்மையில் ஏழரைச் சனி என்பது ஒரு மனிதன் எதிர்காலத்தில் நல்லவிதமாக வாழ்வதற்கான அனுபவங்களையும், பணம் என்றால் என்ன என்பதைப் பற்றிய நேரடி அனுபவத்தையும் தருகின்ற ஒரு அமைப்பு. எத்தனை பெரிய யோக ஜாதகமாக இருந்தாலும் அந்த ஜாதகத்திற்கு ஏற்ப சனி தனது தீர்ப்பை கொடுத்துதான் தீருவார்.

ஏழரை, பொங்கு, மங்கு சனி விஷயத்தை எடுத்துக் கொண்டால், பிறந்த உடன் முதலில் வருகின்ற சனி ஏழரை சனி எனவும், இந்த சனி கெடுபலன்களைத் தரும் வாழ்க்கை என்ன என்னவென்று உணர வைத்து விடுவார் சனிபகவான் நிறைய படிப்பினைகளை தருவார். இரண்டாவது முப்பது வருடங்களில் வருகின்ற சனி பொங்கு சனி எனவும், அது நல்ல பலன்களைத் தரும் எனவும், மூன்றாவதாக முப்பது வருடங்களில் வரும் சனி மங்கு சனி எனவும், அது முதல் சுற்று சனியைப் போலவே சில சவால்களை கொடுக்கும்.

மகரம் ராசியில் இப்போது சனி சஞ்சரிப்பதால் கும்பம் ராசிக்கு விரைய சனி, மகரம் ராசிக்கு ஜென்ம சனி, தனுசு ராசிக்கு பாத சனியாக ஏழரை சனிகாலம் அமைந்துள்ளது. சனிபகவானின் ஆட்சி வீடு மகரம், கும்பம் என்பதால் இந்த இரண்டு ராசிக்காரர்களுக்கும் சனிபகவான் எந்த பிரச்சினையும் கொடுக்கமாட்டார் என்றாலும் எச்சரிக்கையாகவும் விழிப்புணர்வோடும் இருக்க வேண்டும்.

மிக முக்கியமாக இந்த முதல் இரண்டரை ஆண்டு காலத்தில் ஒரு மனிதர் ஏழரைச் சனியின் கெடுபலன் தாக்கத்தை உணர்வது இல்லை. இன்னும் சொல்லப் போனால் சிலருக்கு அதீதமான பொருள் வரவும் விரயச்சனி காலத்தில் கிடைக்கவே செய்கிறது. இந்த காலகட்டத்தில் ஒரு மனிதனிடம் தாராளமாகவே பணம் இருக்கும். 30 வயதுக்கு உள் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் பொங்குசனியை அனுபவிப்பார்கள். சொத்துக்களை சேர்க்க முடியும் கூடவே அனுபவங்களையும் சேர்க்க முடியும்.

ஏழரைச்சனியின் நடுப்பகுதியான கொஞ்சம் சவாலான நேரம். இது பொங்கு சனி காலமாக இருந்தாலும் சரியான பரிகாரங்கள் செய்யாவிட்டால் படுத்தி எடுத்துவிடும். மனிதனின் சொந்த ராசியில் இரண்டரை வருடங்களுக்கு சனி இருக்கும் நிலையே, ஜென்மச்சனி எனப்படுகிறது. இந்த இரண்டரை ஆண்டு காலத்தில், ஒருவரின் சொந்த நட்சத்திரத்தில் சனி செல்லும் ஏறத்தாழ ஒரு ஆண்டு காலத்தில் மிகக் கடுமையான மன உளைச்சல் இருக்கும் பரிகாரங்களால் தப்பிக்கலாம்.

பாதச் சனி எனப்படும் ராசிக்கு இரண்டாமிடத்திற்கு சனி மாறியவுடன் இதுநாள் வரை நடந்த கெடுபலன்கள் குறைய ஆரம்பிக்கும். ஆனாலும் இந்த நிலையில் முழுமையான நன்மைகள் நடந்து விடுவது இல்லை. சனி முழுவதுமாக முடிந்ததும் அந்த மனிதர் செட்டிலாகும் வாழ்க்கை வாழ்வதற்கான ஆரம்பங்கள் இந்த பாதச் சனி அமைப்பில் நடக்கும். நிறைய படிப்பினைகளை கொடுத்த சனி போகிற போக்கில் அள்ளி கொடுத்து விட்டும் செல்வார். சனிபகவான் நீதிமான் என்பதால் நல்லவர்களுக்கு நல்லதே செய்வார் என்பதால் எல்லோருமே ஏழரை சனி காலம் வந்தாலோ பயமோ, பதற்றமோ அடையவேண்டாம்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: