ஆன்மீகம்

வீடு கட்டுவதில் தடங்கலா?

மனிதருக்கு மிகவும் அவசியமான தேவைகளில் உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க வீடு ஆகிய மூன்றும் முக்கியமானதாகும். இதில், ஒருவருக்கு சொந்த வீடு அமைவது என்பது கொடுப்பினை இருந்தால் கிடைக்கும். ஏனெனில், ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் பலமற்று இருந்தால் வீடு அமையும் யோகம் தடைபடும். அத்தடை நீங்க, சிவப்பு நிற மலர்களால் செவ்வாயை பூஜித்து வர விரைவில் சொந்த வீடு அமையும். மேலும், தினமும் கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், திருப்புகழ், முருகன் துதிப்பாடல்களைப்பாடி வழிபட்டால் புத்தி யோகம், பூமி பாக்கியம் என சகல யோகங்களும் பெருகும். அதையடுத்து, வீடு கட்டுவதற்கு எந்த தெய்வத்தின் அருள் வேண்டும்? வீடு கட்ட தாமதம் ஆனால் என்ன செய்ய வேண்டும்? சொந்த வீடு கட்டுவதற்கு யாரை வணங்க வேண்டும்? தங்கு தடையின்றி வீடு கட்ட என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

எந்த தெய்வம்

ஒருவருக்கு வீடு, நிலம், மனை போன்றவை அமையவேண்டும் என்றால், அதற்கு செவ்வாயின் அனுக்கிரகம் இருந்தால் தான் முடியும்.

செவ்வாய்க்குரிய கடவுள் முருகன். அனைத்து முருகன் தலங்களும் செவ்வாய் பரிகாரத் தலங்களே.

அறுபடை வீடுகளுக்குச் சென்று முருகனை வணங்கினால், செவ்வாயால் உண்டாகும் பிரச்சனைகள் விலகும்.

பழநியில் தண்டாயுதபாணி செவ்வாயாகவே அருள்பாலிக்கிறார்.

மயிலாடுதுறை அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோயில், செவ்வாய்க்கான முக்கிய பரிகாரத் தலம் ஆகும்.

நவதிருப்பதிகளில் ஆழ்வார் திருநகரிக்கு அருகில் உள்ள திருக்கோளூர் தலம், செவ்வாய்க்கான பரிகாரத் தலமாகும்.

கட்டுமான பணி தாமதமா

வீடு கட்ட தாமதம் ஆகிறது என்றால், ஒருமுறை திருச்செந்தூர் சென்று முருகப்பெருமானை வணங்கி ‘ஓம் சரவண பவ’ எனும் மந்திரத்தை உச்சரித்து சிறிது நேரம் தியானம் செய்ய வேண்டும்.

பின்னர், கடலுக்கு சென்று கடல் நீரை வீட்டிற்கு எடுத்து வந்து மஞ்சளுடன் கலந்து, வீடு கட்டுகின்ற நிலத்தைச் சுற்றித் தெளிக்க வேண்டும்.

அப்படிச் செய்தால், நிச்சயம் தடைகள் நீங்கி கட்டுமான பணி விரைவில் முடிவடைவதை கண்கூடாக காணலாம்.

வீடு கட்டுவதற்கு

சிறுவாபுரி முருகனை ஒன்பது செவ்வாய்களில் வணங்கி வர, வாழ்வில் அற்புதமான முன்னேற்றம் ஏற்பட்டு நிலம் வாங்கி, வீடு கட்டும் கனவு நிஜமாகும்.

ஒன்பது செவ்வாய்க்கிழமைகள், தொடர்ந்து சிறுவாபுரி கோயிலுக்குச் சென்று, முருகப்பெருமானை வணங்குவதால் ஜாதக ரீதியான குறைபாடுகள் தணிந்து, சொந்த வீட்டில் ஆனந்தமாக குடியேறும் நிலை வரும்.

தங்கு தடையின்றி

நன்னிலம், நாகப்பட்டினம் சாலையில், நன்னிலத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள திருப்புகலூர் ஸ்தலம் வாஸ்து பூஜை செய்வதற்கு மிகவும் விசேஷமானதாகக் கருதப்படுகிறது.

இதையும் படிங்க:  சங்கடங்களை தீர்க்கும் சஷ்டி விரதம்!

சுந்தரருக்கு பொன் கட்டிகளாக இங்குள்ள இறைவன் கொடுத்ததையடுத்து, கோயில் சார்பாக மூன்று செங்கல்களை பூஜை செய்து கொடுக்கிறார்கள்.

இந்த செங்கல்களை வீட்டிற்கு எடுத்து வந்து ஒரு நல்ல நாளில் முதல் கல்லாக வைத்து கட்டட வேலையைத் தொடங்கினால், எந்தவித தங்கு தடையும் இன்றி விரைவில் கட்டிட வேலை முடியும்.

திருச்சியில் இருந்து துறையூர் செல்லும் வழியில், சமயபுரம் டோல்கேட்டில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீபூமிநாதர் கோயிலில் வீற்றிருக்கும் ஸ்ரீபூமிநாத வணங்கினால், விரைவில் வீடு மனை வாங்கும் யோகம் கிடைப்பது உறுதி.

இங்கே, வாஸ்து பரிகார பூஜையும் விசேஷம். நிலம் வாங்கும் முன்போ அல்லது கட்டிட பணியில் தடை என்றாலோ, நிலத்தின் வட கிழக்கு மூலையில் இருந்து பிடிமண் எடுத்து, அதை மஞ்சள் துணியில் கட்டி, வாஸ்து நாளில் கொண்டு வந்து ஸ்ரீபூமிநாதருக்கு பூஜை செய்ய வேண்டும்.

பின்னர், மண்ணில் ஒரு பிடியை ஆலய தல விருட்சமான வில்வ மரத்தடியில் போட வேண்டும். மற்றொரு பிடி மண்ணை வன்னி மரத்தடியில் போடுகிறார்கள். அப்போது மகா ருத்ர யாகம் செய்த சாம்பலில் ஒரு பிடி எடுத்து தங்கள் கையில் இருக்கும் துணி முடிப்பில், எஞ்சிய ஒரு பிடி மண்ணோடு சேர்த்து வைத்துக் கொள்கின்றனர்.

மூன்றாவது முறை ஆலயத்தை வலம் வந்து நவக்கிரக நாயகர்களை வழிபடுகிறார்கள். வீட்டிற்கு வந்ததும், மண்ணோடு கலந்த சாம்பலை வீட்டின் பூஜை அறையில் வைத்து விடுகிறார்கள். 5 நாட்களுக்குப் பின்னர், அதில் பாதியை எடுத்து மண் எடுக்கப்பட்ட இடத்தில் போட வேண்டும். அப்படி செய்தால் மூன்று மாதங்களுக்குள் நினைத்தது நடக்கும் என்கிறார்கள்.

பிராகாரத்தில் உள்ள வன்னிமரத்தடியில் இருந்து மண் எடுத்துக்கொண்டு, ஸ்ரீபூமிநாதரை வணங்கிவிட்டு, மனையின் வடகிழக்கு மூலையில் போட்டுவிட்டு வேலையைத் துவக்கினால், வீடு மற்றும் கட்டிடப் பணிகள் தடையின்றி நடைபெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: