தமிழ்நாடு

பாமக போராட்டத்தில் திமுக?..

பாமக சார்பில் வன்னியர்களுக்கு எம்பிசி இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்கக் கோரி பல கட்டப் போராட்டங்கள் நடைபெற்ற நிலையில்… ஆறாம் கட்டப் போராட்டமாக இன்று (ஜனவரி 29) கலெக்டர் அலுவலகங்களில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெறுகிறது.

வி.ஏ.ஓ. அலுவலகங்கள், ஊராட்சி அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள் என நடந்த போராட்டம் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன்பு நடக்கிறது. இந்தப் போராட்டத்தில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணியும் பங்கேற்றுள்ளார்.

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடக்கும் இந்த போராட்டத்தில், “பாமகவில் உள்ள வன்னியர்கள் மட்டுமின்றி திமுக, அதிமுக என பிற கட்சிகளைச் சேர்ந்த வன்னியர்களையும் நாம் இடம்பெறச் செய்ய வேண்டும். நமது கோரிக்கை அனைத்துக் கட்சிகளிலும் உள்ள வன்னியர்களுக்கானது” என்று ராமதாஸும், அன்புமணியும் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறார்கள்.

இந்நிலையில் இன்று நடந்த போராட்டத்தில் பாமக, வன்னியர் சங்க கொடிகளோடு திமுக, அதிமுக கொடிகளும் தென்பட்டன. இது அரசியல் அரங்கில் கவனிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை திமுக நிர்வாகிகள் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

அதிமுக கூட இப்போது பாமகவின் கூட்டணிக் கட்சி. ஆனால் திமுகவும் பாமகவும் எதிரெதிர் துருவமாக அறிக்கை யுத்தம் நடத்திக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் பாமக போராட்டத்தில் திமுக கொடிகள் எப்படி இடம்பெற்றுள்ளன என்ற சந்தேகத்தில், திமுக கொடி பிடித்துக் கொண்டிருந்த சிலரிடம் நீங்கள் திமுக காரரா என்று கேட்டோம்.

அவர்களோ, “நாங்கள் திமுகவோ அதிமுகவோ அல்ல. பாமகவினர்தான். எங்களுடைய போராட்டத்துக்கு எல்லா கட்சியின் ஆதரவும் இருக்கிறது என்பதை வெளிக்காட்டத்தான் அந்தக் கட்சிகளின் கொடிகளையும் எடுத்து வந்தோம்”என்று சாதாரணமாக பதிலளித்தனர்.

Back to top button
error: Content is protected !!