தமிழ்நாடுமாவட்டம்

உத்தரமேரூர் அருகே அரியவகை கல் செக்கு பொக்கிஷம் கண்டுபிடிப்பு..!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே விண்ணமங்கலம் கிராமத்தில் அரியவகை செக்கு கல்வெட்டு ஒன்று மண்ணில் புதைந்த நிலையில் இருப்பதை வரலாற்று ஆய்வு மையத்தினர் கண்டுபிடித்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே விண்ணமங்கலம் கிராமத்தில் 15-ஆம் நூற்றாண்டை சேர்ந்த அரியவகை கல்செக்கு ஒன்று மண்ணில் புதைந்து கிடப்பதை தமிழக தொல்லியல்துறை உரிய கவனம் செலுத்தி பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து உத்தரமேரூர் வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர் கொற்றவை ஆதன் பேசியபோது, “உத்தரமேரூர் அருகேயுள்ள விண்ணமங்கலம் கிராமத்தில் களப்பணியில் ஈடுபட்டிருந்தோம். அப்போது மண் மேடு ஒன்றில் முட்புதரில் புதைந்த நிலையில் கல்செக்கு ஒன்று இருப்பதை கண்டறிந்தோம். மூன்று வரியில் அதில் கல்வெட்டு எழுத்துக்கள் இருந்தன.

468d1c99bae0a3133fbce773c7035ab8 original

பழங்காலத்தில் எண்ணெய் வித்துக்கள் மக்கள் வாழ்வில் பெரும் இடம் பிடித்திருந்தது. சமையல் பயன்பாட்டிற்கும்,மருத்துவத்துக்கும் கல்செக்குகளே பெரிதும் பயன்பட்டிருக்கின்றன. மின்சாரம் இல்லாத வீட்டிற்கும்,கிராமங்களில் விளக்கு இல்லையென்றால் தெருவிளக்காகவும் கல்செக்குகளே பயன்பட்டிருக்கின்றன. இவை அரசுக்கு வருவாயையும் ஈட்டித் தந்திருக்கின்றன.

ஒரு மன்னரோ அல்லது பெரும் செல்வந்தரோ தனது குடும்பத்தார் உடல்நலம் பெறவேண்டி ஆலயத்திற்கோ அல்லது ஊருக்காகவோ கல்செக்கை தானமாக வழங்கியிருக்கிறார்கள். இதன் மூலம் பொதுமக்களும் தானமாக பெற்றனர். அவ்வாறு தானம் வழங்கும் செக்கில் எந்த ஆண்டு,யார் தானமாக வழங்கினர் என்பதையும் குறிப்பிட்டனர். அதன்படி இச்செக்கில் மூன்று வரியில் குரோதன ஆண்டில் புக்கண்ணராயர் ஆட்சிக்காலத்தில் கலைவாணிகன் என்பவன் இந்த கல்செக்கு உரலை ஊருக்கு தானம் அளித்துள்ள செய்தி இடம்பெற்றுள்ளது.

86a05719cf60dc2e58e41b22b75db18a original

சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட விஜயநகர மன்னர்கள் காலத்தை சார்ந்த அரியவகை கல்செக்காகும். இக்கல்செக்கு கிடைத்த பகுதி செக்குமேடு என்றும் அழைக்கப்படுகிறது. 1923-ஆம் ஆண்டில் இது அரசால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

மண்மேட்டில் முட்புதரில் புதைந்த நிலையில் உள்ள இதன் ஒரு சிறு பகுதி மட்டுமே தற்போது வெளியில் தென்படுகிறது. இயற்கை சீற்றங்களால் விரைவில் முழுமையாக புதைந்து போய் காணாமல் போகவும் வாய்ப்பிருக்கிறது. எனவே வருங்கால தலைமுறையினருக்கு கடந்த கால வரலாற்றை பறைசாற்றும் இவ்வரிய பொக்கிஷத்தை பாதுகாக்க வேண்டும் எனவும் கொற்றவை ஆதன் தெரிவித்தார்.

இதையும் படிங்க:  சர்க்கரை நோயை கவனிக்காமல் விட்டால் உண்டாகும் ஆபத்துகள் என்ன தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: