இந்தியா

டெல்லி வன்முறை.. சசி தரூர் மற்றும் 6 பத்திரிகையாளர்கள் மீது தேசத் துரோக வழக்கு..

சமூக வலைத்தளங்களில் டெல்லி வன்முறை தொடர்பாக வதந்திகளை வெளியிட்டதாக, காங்கிரஸ் எம்.பி சசி தரூர் மற்றும் 6 பத்திரிகையாளர்கள் மீது உத்தரப் பிரதேசத்தில் தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர். இதில் ஈடுபட்டிருந்த சுமார் 41 அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு நடத்திய 11 சுற்று பேச்சுவார்த்தைகளும் தோல்வியடைந்ததால் போராட்டம் இன்னும் நீடித்து வருகிறது. இந்தப் போராட்டத்தை தீவிரப்படுத்தும் நோக்கில், குடியரசு தினத்தன்று சுமார் 1 லட்சம் டிராக்டர்களில் லட்சக்கணக்கான விவசாயிகள் பேரணியாக டெல்லிக்குள் நுழைந்தனர்.

அப்போது காவல்துறைக்கும் விவசாயிக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக உருவெடுத்ததால், விவசாயிகள், போலீசார் தரப்பில் பலர் காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் விவசாயிகளை அடித்து விரட்டினர். இதன்பின்னர் விவசாயிகள் மீண்டும் தங்களது பழைய போராட்ட களத்திற்கு திரும்பினர்.

இந்நிலையில், விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் நடைபெற்ற வன்முறையில், விவசாயி ஒருவர் உயிரிழந்தது குறித்து வதந்திகளை வெளியிட்டதாக, காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சசி தரூர், மற்றும் 6 பத்திரிகையாளர்கள் மீது உத்தரப் பிரதேசம் மாநிலம் நொய்டாவில் உள்ள ஒரு காவல்நிலையத்தில் தேசத் துரோகம், குற்றச் சதி மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பகைமையை ஊக்குவித்தல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

டெல்லிக்கு அருகிலுள்ள நகரத்தில் வசிப்பவர் அளித்த புகாரின் பேரில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Back to top button
error: Content is protected !!