இந்தியா

கொரோனா தடுப்பூசி.. பிரதமர் மோடி புது உத்தரவு..

கொரோனா தொற்று சூழல், தடுப்பு மருந்துகளை வழங்குவதற்கான முன்னேற்பாடுகள், அவற்றின் விநியோகம் மற்றும் நிர்வாகம் குறித்து பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன், பிரதமரின் தலைமை செயலாளர், நிதி ஆயோக் (சுகாதாரம்) உறுப்பினர், முதன்மை அறிவியல் ஆலோசகர், மூத்த விஞ்ஞானிகள், பிரதமர் அலுவலக அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது..
நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் பரப்பளவை கருத்தில் கொண்டு, நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் கொரோனா தடுப்பு மருந்து விரைவாக கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். மருந்துகளை கொண்டு செல்லுதல், வழங்குதல் மற்றும் நிர்வகித்தல், பாதுகாத்தல் ஆகியவற்றுக்கான ஒவ்வொரு நடவடிக்கையும் கடுமையாக திட்டமிடப்பட வேண்டும். குளிர் சேமிப்பு வசதிகள், விநியோக இணைப்புகள், கண்காணிப்பு முறை, முன்னோக்கிய மதிப்பீடு மற்றும் மருந்து குப்பிகள், சிரிஞ்ச்கள் உள்ளிட்ட தேவைப்படும் அனைத்து துணை கருவிகளையும் தயார் செய்தல் மற்றும் ஆகியவற்றுக்கான திட்டமிடலை முன்கூட்டியே முடிக்க வேண்டும். நாட்டில் மேற்கொள்ளப்படும் பேரழிவு மேலாண்மை திட்டம், தேர்தல் நடத்துதல் போன்ற நமது அனுபவங்களை தடுப்பு மருந்து விநியோகத்தில் உபயோகிக்க வேண்டும். இதில், தேவையான அமைப்புகளின் வல்லுநர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள், பொது சமூக அமைப்புகள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், மாநில அளவிலான நிர்வாகிகள் ஆகியோரை ஈடுபடுத்த வேண்டும். ஒட்டு மொத்த செயல்பாடுகளும் வலுவான தகவல் தொழில்நுட்ப பின்னணியில் வடிவமைக்கப்பட வேண்டும். இந்தியாவில் தற்போது 3 தடுப்பூசிகள் முன்னேறிய கட்டத்தில் உள்ளது. அதில் 2 மருந்துகள் 2ம் கட்டத்திலும், ஒரு மருந்து இறுதிக்கட்டமான 3வது கட்டத்திலும் உள்ளது. இந்த மருந்துகள் தொடர்பான ஆராய்ச்சியை வலுப்படுத்த, இந்திய விஞ்ஞானிகளும், ஆய்வு குழுவினரும் ஆப்கானிஸ்தான், பூடான், வங்கதேசம், மாலத்தீவு, மொரீஷியஸ், நேபாளம் மற்றும் இலங்கையுடன் இணைந்து செயல்படுகின்றனர்.

வங்கதேசம், மியான்மர், கத்தார் மற்றும் பூடான் ஆகியவையும், மருந்துகளை பரிசோதிக்கும் திட்டத்தை தங்கள் நாடுகளில் அமல்படுத்த வேண்டுகோள் விடுத்துள்ளன. இதுபோல், தடுப்பு மருந்துகளை வழங்குவதை அண்டை நாடுகளோடு சுருக்கிக் கொள்ளாமல் உலகம் முழுவதற்கும் வழங்க வேண்டும். மேலும், மருந்துகளை விநியோகிக்கும் திட்டங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பூசி நிர்வகித்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள தேசிய நிபுணர் குழு அனைத்து மாநில அரசுகள் மற்றும் பிற பங்குதாரர்களுடன் இணைந்து தடுப்பூசி சேமிப்பு, வழங்குதல் மற்றும் நிர்வகித்தல் குறித்து விரிவான திட்டத்தை வகுக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Back to top button
error: Content is protected !!