தமிழ்நாடு

பள்ளி மாணவிகள் 3 பேருக்கு கொரோனா உறுதி – பள்ளிகளை மூட வாய்ப்பு?

ஏறத்தாழ 4 மாதங்களுக்கு பிறகு தமிழகம் முழுவதும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு தனியார் பள்ளியில் பயிலும் 2 மாணவிகள் உட்பட 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா 2 ஆம் அலை பரவல் குறைந்து வந்ததையடுத்து, தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மீண்டுமாக திறக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அரசு வெளியிட்டுள்ள கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நடைமுறைகளை பின்பற்றி 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

அதாவது பள்ளி வளாகத்தினுள் நுழையும் போது உடல்வெப்பநிலை பரிசோதனை, கை சுத்திகரிப்பது போன்ற நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தவிர வகுப்பறைகளில் மாணவர்கள் முகக்கவசங்களை அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி ஒரு இருக்கையில் 2 பேர் என்ற வகையில் 20 பேர் மட்டும் அமர வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேரடி வகுப்புகளில் கலந்து கொண்டு வந்த 3 பள்ளி மாணவிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

அதன் படி, அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 2 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதில் ஒருவர் 9 ஆம் வகுப்பும், மற்றொருவர் 12 ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர். இதை தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணிக்கம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்த 3 மாணவிகளும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அப்பள்ளிக்கு வருகை தந்துள்ள மற்ற ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை பணிகள் தற்போது துவங்கியுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் மற்ற பள்ளிகளிலும் கொரோனா தொற்று குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளதையடுத்து பள்ளிகளை மீண்டும் மூடுவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வருகிறது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: