இந்தியா

சர்ச்சைக்குள்ளான கேரள மாணவர்களின் நடன வீடியோ.. அப்படி என்னதான் நடந்தது?

கேரளா திருச்சூரில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் வெளியிட்டுள்ள நடன வீடியோ தற்போது சர்ச்சைக்கு ஆளாகியுள்ளது.

போனி எம் இசைக்குழுவின் பிரபல பாப் பாடலான ’ரஸ்புடின்’ பாடலுக்குக் கடந்த மார்ச் 23 ஆம் தேதி கேரளாவின் திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரியின் நான்காம் ஆண்டு மாணவர் நவீன் கே ரசாக்கும், மூன்றாம் ஆண்டு மாணவி ஜானகி ஓம்குமாரும் உற்சாகமுடன் கல்லூரியில் நடனம் ஆடி வீடியோ வெளியிட்டனர். இவர்கள் இருவரும் ஆடிய நடனம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

கொரோனா சூழலில் தொடர்ந்து மன அழுத்தத்தில் பணியாற்றி வரும் மருத்துவர்கள் இந்த வீடியோவை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்து தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வந்தனர்.

நவீன் கே ரசாக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்த நடன வீடியோவுக்கு இதுவரை 6 லட்சம் பார்வையாளர்களுக்குமேல் கடந்துள்ளது.

இந்த நிலையில், வழக்கறிஞர் கிருஷ்ணராஜ் என்பவர், ஜானகி ஓம்குமார் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் அவருடன் நடனம் ஆடும் நவீன் கே ரசாக் இஸ்லாமியர் என்பதாலும் “ஜானகியின் பெற்றோர் கவனமாக இருக்கவேண்டும். இதில் ஏதோ தவறு இருக்கிறது. நவீன் கே ரசாக் ஒரு இஸ்லாமியர். ஜானகி தந்தைக்காகவும் அவரின் மனைவிக்காகவும் வேண்டிக்கொள்கிறேன். அவர்களுக்கும் நிமிஷாவின் நிலைமை ஏற்பட்டுவிடக்கூடாது” என்று கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி தனது ஃபேஸ்புக்கில் இவர்கள் நடனம் ஆடும் வீடியோவை பகிர்ந்து கருத்து தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே, பாஜகவினரின் இந்தக் கருத்தைக் கண்டிக்கும் விதமாக திருச்சூர் அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் பலரும் #ResistHate ஹேஷ்டேக்கில் இதே பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ ’வெறுப்பது உங்கள் திட்டம் எனில், அதை எதிர்ப்பது எங்கள் முடிவு’ என்று (If the intention is hate, then the decision is to resist) என்று ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து தனது கருத்தைப் பதிவு செய்த காங்கிரஸைச் சேர்ந்த சசி தரூர், “வெவ்வேறு மதங்களின் காரணமாக இந்துத்துவா விஷத்தை ஊற்றுவதற்குப் பதில் கைத்தட்டலுக்கும் ஊக்கத்திற்கும் தகுதியானவர்கள் இந்த மாணவர்கள். இளமையான இந்தியாவின் சிறந்த இளைஞர்களாகவும் தோழர்களாகவும் இருக்கிறார்கள். எதிர்காலத்தில் சிறந்த மருத்துவர்களாக வெளிப்படுவார்கள்” என்று இந்த வைரல் வீடியோவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த சர்ச்சைகள் அனைத்திற்கும் பதிலளித்துள்ள நடனம் ஆடி வைரலான நவீன் கே ரசாக், ”சமீபத்தில் நடன இயக்குநர் வனேசா சகோ இன்ஸ்டாகிராம் வீடியோவில் ரஸ்புடின் பாணியில் நடனம் ஆடினார். அதில், ஈர்க்கப்பட்டு நாங்களும் ரஸ்புடின் பாடலுக்கு நடனமாட முடிவுசெய்து பயிற்சி எடுத்து வகுப்பு முடிந்தவுடன் நடனமாடி வீடியோ எடுத்தோம். அடுத்ததாக வேறொரு பாடலுக்கும் நடனமாடி வீடியோ வெளியிடவுள்ளோம்.

அந்த வீடியோவும் எதிர்பார்ப்புகளுக்குக் குறைவில்லாதது. நாங்கள் புதிய தலைமுறையினர். இதுபோன்ற வகுப்புவாத கருத்துகள் குறித்து கவலைக்கொள்ளவில்லை” என்று கூறியுள்ளதோடு தற்போது மீண்டும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜானகி ஓம்குமாருடன் அமர்ந்து ’தங்களை ஆதரித்தவர்களுக்கு நன்றி’ தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: