சினிமா

படப்பிடிப்பு தளத்தில் குப்பை போட்டதாக புகார் – அமீர்கான் படக்குழு விளக்கம்!!

டாம் ஹாங்ஸ் நடிப்பில் 1994-ல் வெளியாகி வெற்றி பெற்ற ‘பாரஸ்ட் கம்ப்’ ஹாலிவுட் படம் இந்தியில் ‘லால் சிங் சட்டா’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதில் அமீர்கான் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பை சமீபத்தில் லடாக்கில் நடத்தினர். படப்பிடிப்பை முடித்து விட்டு கிளம்பியதும் அந்த பகுதியில் குப்பைகளை படக்குழுவினர் அப்படியே போட்டு விட்டு சென்றதாக சர்ச்சை கிளம்பியது.

படப்பிடிப்பு தளத்தில் குப்பைகள் கிடந்ததை ஒருவர் வீடியோவில் படம் எடுத்து டுவிட்டரில் பகிர்ந்து “லடாக்கின் வாகா கிராமத்தினருக்கு அமீர்கான் படக்குழுவினர் விட்டு சென்ற பரிசு இது. சுற்றுச்சூழல் தூய்மை பற்றி அமீர்கான் அதிகம் பேசுவார். அவரது படப்பிடிப்பு தளம் அசுத்தமாக உள்ளது’’ என்று கூறியிருந்தார். இதையடுத்து அமீர்கானை பலர் தொடர்ந்து விமர்சித்து வந்தனர்.

இதையடுத்து அமீர்கான் பட நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்களுடைய படப்பிடிப்பு தளம் சுத்தமாக இல்லை என்று குற்றச்சாட்டுகள் வருகின்றன. படப்பிடிப்பு தளத்தை தூய்மையாக வைத்துக்கொள்வதில் உறுதியாக இருக்கிறோம். படப்பிடிப்பு தளத்தில் குப்பைகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள தனிக்குழுவையே வைத்துள்ளோம். நாங்கள் எப்போதுமே படப்பிடிப்பை முடித்து விட்டு அந்த இடத்தை சுத்தப்படுத்தி விட்டு தான் செல்கிறோம்’’ என்று கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: